சென்னை

டெங்கு: அறிவிப்பு வெளியிட்டு 6 நாள்களாகியும் அப்புறப்படுத்தப்படாத வாகனங்கள்!: அலட்சியம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்

ஆர்.ஜி. ஜெகதீஷ்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உபயோகமற்று சாலையில் நிறுத்தி வைக்கிப்பட்டிருக்கும் வாகனங்களை ஒரு வாரத்திற்குள்ளாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உத்தவிட்டிருந்தார்.
டெங்கு காய்ச்சைலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் இதுபோன்று உபயோகமற்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் தேங்கி நிற்கும் நீரில் உற்பத்தியாவதால் இதனை தடுக்கும் பொருட்டு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கண்காணிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகரின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலை மற்றும் அதனையொட்டியுள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் இன்னமும் உபயோகமற்ற வாகனங்கள் அகற்றப்படவில்லை. அதுமட்டுமல்லால் இந்தப் பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், குப்பையும் அகற்றப்படவில்லை என்பது பொது மக்களின் புகாராக உள்ளது.
ராயப்பேட்டை: அண்ணா சாலையின் அருகே அமைந்துள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை கார் உதிரிபாகங்கள் விற்பனைக்கு மிகவும் பெயர் பெற்றது. எனவே, இந்தச் சாலையை ஒட்டியுள்ள தெருக்களில் இந்த வியாபாரத்தைச் சார்ந்து பல தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் ஆண்டுக்கணக்காக பல்வேறு கார்களும், ஆட்டோக்களும், பைக்குகளும் உபயோகமற்று நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வாகனங்களில் தேங்கியுள்ள மழை நீர் மூலமாக ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 
முக்கியமாக ராயப்பேட்டை பூ பேகம் வரிசை தெருக்கள் சுகாதார சீர் கேடுகளால் நிரம்பி வழிகின்றன. இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் குப்பை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. ராயப்பேட்டை பூபேகம் முதல் தெருவைச் சேர்ந்த யூனஸ் கூறியதாவது: வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோதான் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இங்கு கொசு தொல்லையும் அதிகமாகவே உள்ளது. டெங்கு குறித்த விழிப்புணர்வும் இந்தப் பகுதியில் பெரிய அளவில் இல்லை . மேலும், சில மாநகராட்சி ஊழியர்கள் பக்கத்து தெருக்களில் பிளீச்சிங் பவுடர்களை மட்டும் தேங்கிய நீரில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அனைத்து தெருக்களிலும் இத்தகைய பணியைச் செய்தால் சிறப்பாக இருக்கும். இங்கு உபயோகமற்று தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் எவருடையது என்பதே தெரியாது. சில வாடிக்கையாளர்கள் பழுது பார்க்க இங்கே கார்களையும், பைக்குகளையும் கொண்டு வந்து விடுவார்கள், பின்பு எடுத்துச் செல்ல வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் இந்த வாகனங்கள் பல்லாண்டு காலமாக அப்படியே இருக்கின்றன என்றார் அவர்.
என்ன செய்கிறது மாநகராட்சி ?: சென்னை மாநகரின் அனைத்து மண்டலங்களிலும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்த கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளித்தல், கைத்தெளிப்பான், புகைப்பரப்பும் இயந்திரம் மற்றும் வாகனம் மூலம் புகை பரப்பும் பணியும் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் பொருட்களை அகற்றுமாறு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆகியவை பல வருடங்களாக உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு மூலகாரணமாக அமைகிறது என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதில் மழைநீர் தேங்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அதனைத் தடுத்திட வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி கொடுத்துள்ள காலக் கெடுவுக்குள் அப்புறப்படுத்த தவறினால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT