மனைவி கொலை: கோயில் குருக்கள் உள்பட 2 பேர் கைது நகைக்காக கொலை நடந்ததுபோல நாடகமாடியது அம்பலம்
சென்னை வடபழனியில் மனைவியை அடித்துக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது கணவரும், நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வடபழனியில் மனைவியை அடித்துக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது கணவரும், நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவர் வடபழனி சிவன் கோயில் குருக்களாகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஞானப்பிரியா, கடந்த 5-ஆம் தேதி அதிகாலை வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார், பாலகணேஷ் கழிப்பறையில் கை, கால், கழுத்து கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். ஞானப்பிரியாவின் 15 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இச் சம்பவம் குறித்து வடபழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கணவர் நாடகம்: இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, நள்ளிரவில் உருட்டுக் கட்டையுடன் வந்த இருவர் தன்னை தாக்கிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று தனது மனைவியைக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
இதை உறுதிப்படுத்துவதற்காக, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் இருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அந்நியர்கள் யாரும் பாலகணேஷின் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் பாலகணேஷ் கூறும் தகவல்கள், முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாலகணேஷை போலீஸார் காவலில் வைத்து விசாரணை செய்தனர்.
இதில், பாலகணேஷ், ஞானப்பிரியாவை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை ஒத்துக்கொண்டார்.
காட்டிக் கொடுத்த ரத்தம்: இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியது:
சம்பவத்தின்போது மயக்க நிலையில் இருந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் மீது ரத்தத் துளிகள் இருப்பது தெரியவந்தது. உடனே, அந்த ரத்தத் துளிகளை பாலகணேஷுக்கே தெரியாமல் எடுத்து, தடயவியல் துறைக்கு அனுப்பினோம்.
இதில் அந்த ரத்தமும், ஞானப்பிரியாவின் ரத்தமும் ஒன்று என்பது தெரியவந்தது. மேலும் பாலகணேஷ் கொடுத்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததினால், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினோம்.
இதில் அவர், தனது நண்பரான பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜுடன் (29) சேர்ந்து ஞானப்பிரியாவை கொலை செய்துவிட்டு, நகைக்காக கொலை நடைபெற்றதுபோல நாடகமாடியிருப்பது தெரியவந்தது.
பாலகணேஷுக்கும், ஞானப்பிரியாவுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ஞானப்பிரியா தனது கணவரை அவமானப்படுத்தும் வகையிலும், உதாசீனப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இதில் ஒரு கட்டத்தில் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட பாலகணேஷ், தனது மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று அதிகாலை பாலகணேஷ், ஞானப்பிரியாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, நகைக்காக நடந்ததுபோல சித்திரிப்பதற்காக அவரை ஒரு கயிற்றால் கட்டிப் போட்டார்.
பின்னர், அங்கு வரவழைத்த தனது நண்பர் மனோஜிடம், ஞானப்பிரியாவின் 15 பவுன் தங்கநகையை கொடுத்தார்.
மேலும் தன் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மனோஜை, தன்னை கழிப்பறையில் ஒரு துணியால் கட்டிப்போடச் செய்து, தன் மீது தண்ணீரை தெளிக்கச் செய்துள்ளார். இதன் பின்னர், மனோஜ் அங்கிருந்து நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளார். நகைக்காக ஞானப்பிரியா கொலை செய்யப்பட்டதுபோல காட்சிகளை பாலகணேஷ் உருவாக்கி இருந்ததால், விசாரணையில் தொடக்கத்தில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் அவர் மீது இருந்த ரத்த துளிகளும், தடயங்களும் பாலகணேஷை காட்டிக் கொடுத்து விட்டது என்றனர்.
இதையடுத்து, பாலகணேஷ், மனோஜ் ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.