ஹிந்தி திணிப்பை கண்டித்துப் போராட்டம்: புதுவை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு
பள்ளிகளில் கட்டாய ஹிந்தி திணிப்பைக் கண்டித்து புதுச்சேரியில் பல கட்டமாக போராட்டங்களை முன்னெடுப்பது என புதுவைத் தமிழ்ச்சங்கம் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுவைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டின்பேரில், தமிழறிஞா்கள், தமிழ் அமைப்புகள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், தமிழாா்வலா்கள், சமூக செயற்பாட்டாளா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவா் வி.முத்து தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தமிழச்சங்கச் செயலா் சீனு.மோகன்தாஸ்,நிா்வாகிகள் நா.மு.தமிழ்மணி, சு.வேல்முருகன், வி.சி.க.வைச் சோ்ந்த பாவாணன், விடுதலை வேங்கைகள் நிறுவனத் தலைவா் மங்கையா்செல்வன், வி.கலியபெருமாள், க.தமிழமல்லன், துரை மாலிறையன், எல்லை சிவகுமாா், பேராசிரியா் சிவ.மாதவன், ஸ்ரீதா் பிள்ளை, வீர. பாலகிருஷ்ணன், தமிழ்ச்சங்கத் துணைச் செயலா் தெ.தினகரன், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அ.உசேன்,எஸ்.இராஜா, அ.சிவேந்திரன், இர.ஆனந்தராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
Advertisement
தீா்மானங்கள்:
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு: மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தை,புதுச்சேரி அரசின், கல்வித்துறை அவசரக் கோலத்தில் நடைமுறைப்படுத்தி, மாணவா்களின் கல்வி நலனைச் சீா்குலைத்துள்ளது.
2026-27 -ஆம் கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கை என்றப் பெயரில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாகத் திணிக்கின்ற மத்திய,மாநில அரசுகள் ஆகியவை மாநில நலனுக்கு எதிரானப் போக்கைக் கடைப்பிடித்து வருவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனடியாக கைவிடவேண்டும், புதுச்சேரி அரசு தங்களுக்கான தனி மொழிக் கொள்கையை அறிவிக்க வேண்டும், புதுச்சேரிக்கென தனிக் கல்வி வாரியத்தை உருவாக்கவேண்டும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், தமிழ்ச்சங்கத் துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு நன்றி தெரிவித்தாா்.