வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியபோது தவறி விழுந்த இளைஞர் சாவு
சென்னை அமைந்தகரையில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியோடியபோது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் இறந்தார்.
சென்னை அமைந்தகரையில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியோடியபோது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் இறந்தார்.
வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (24). இவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். ஆர்த்தி செவ்வாய்க்கிழமை காலை பணிக்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் வளசரவாக்கத்தில் இருந்து அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்ததில் இறங்கினார். அங்கிருந்து அவர், வங்கியை நோக்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென ஆர்த்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள், அந்த இளைஞரை விரட்டிச் சென்றனர்.
அந்த இளைஞர் அய்யாவுநாயுடு ரங்கராஜலு தெருவில் ஓடி, இரண்டு மாடி கட்டடத்தின் மீது ஏறினார். இருப்பினும் பொதுமக்கள், அந்த இளைஞரை விரட்டியபோது, அந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு தாவ முயன்றார்.
அப்போது நிலைத் தடுமாறி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தகவலறிந்த அமைந்தகரை போலீஸார், அந்த இளைஞரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டு விபத்தில் உயிரிழந்த இளைஞர், சூளைமேட்டைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (19) என்பது தெரிய வந்தது. போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிந்துள்ளனர்.