பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பணவீக்க நாயகனின் அதிரடி தொடருவதாக ராகுல் காந்தி கண்டனம்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக உயர்ந்துள்ள நிலையில், பணவீக்க நாயகன் பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி தொடருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான கடுமையான சண்டை காரணமாக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
மே 15, 19, 23 மற்றும் இன்று (மே 25) என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசு வீதமும் , டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.2-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.38-ம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பணவீக்க மனிதர் மோடியின் அதிரடி தொடருகிறது. அவர்கள் பெட்ரோல்-டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்தி வருகின்றனர்.
விலையேற்றத்தில் பொருளாதாரப் புயல் வீசும் என்று நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் மோடி, வழக்கம் போல தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்தார். தேர்தல்கள் முடிந்த உடனேயே, பெட்ரோல்-டீசல் விலை ரூ. 8 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பணவீக்க நாயகன் மோடியின் ஒரே வேலை இதுதான். தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளிப்பது, மற்ற நேரங்களில், மக்களின் பாக்கெட்டை குறிவைப்பது” எனக் குறிப்பிட்டுள்ளார்.