சென்னை

ரூ.33 ஆயிரம் லஞ்சம்: தொழில் மைய உதவி இயக்குநர் கைது

DIN


சென்னை அருகே ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரி அருகே உள்ள கீழ்க்கட்டளை எஸ்.ஆர்.வி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் ஏ.சுனில்குமார் ரத்தினம். தொழிலதிபரான இவர், கீழ்க்கட்டளையில் பெரிய அளவில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள நவீன இயந்திரம் வாங்கத் திட்டமிட்டார். 
இந்த இயந்திரத்தை மாவட்ட தொழில் மையம் மூலம் வாங்கினால் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும் என்பதால், அதனை பெறுவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையத்தில் அவர் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை, காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் செ.அருள் (44) பரிசீலனை செய்தார்.
பின்னர் ரத்தினத்தை தொடர்பு கொண்ட அருள், அந்த இயந்திரத்துக்கு மானியம் வழங்க ரூ.33 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டாராம். தனக்கு லஞ்சம் தரவில்லையென்றால், விண்ணப்பத்தை நிராகரிக்க போவதாகவும் எனவும் அருள் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரத்தினம், லஞ்ச ஒழிப்புத் துறையில் அருள் மீது புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அருள் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டதாம். இதையடுத்து போலீஸார் ரத்தினத்திடம், ரசாயன பவுடர் தடவிய ரூ.33 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்கும்படி கூறினர்.
அதன்படி ரத்தினம், அருளை தொடர்பு கொண்டார். அப்போது அருள், அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் இருக்கும் தனது வீட்டின் அருகே வந்து, அந்தப் பணத்தை தரும்படி கூறினார். உடனே ரத்தினம், திங்கள்கிழமை காலை அங்கு பணத்துடன் சென்று அருளை சந்தித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், அருளை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT