சென்னை

"சாலை விபத்துகளுக்கு தூக்கமின்மையே முக்கிய காரணம்'

தினமணி

சாலை விபத்துகள் அதிகளவில் நடப்பதற்கு தூக்கமின்மையே முக்கிய காரணம் என்று சர்வதேச மருத்துவ நிபுணர் திரிபாத் தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்களிடையே நிலவி வரும் தூக்கமின்மை தொடர்பான பிரச்னைகள் குறித்த கருத்தரங்கம் "புத்தி' கிளினிக் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, நரம்பு, உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 சிங்கப்பூரைச் சேர்ந்த தூக்க குறைபாடு சிகிச்சை நிபுணர் திரிபாத் தீப் சிங் கருத்தரங்கில் பேசியது:
 மனித வாழ்வில் தூக்கம் இன்றியமையாத ஒன்று. அதைத் தவிர்த்து உடலையும், உள்ளத்தையும் இயங்க வைக்க முடியாது. எந்தெந்த வயதைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?, எப்படி தூங்க வேண்டும்? என்பதற்கு சில வரையறைகள் உள்ளன. ஆனால், சமகாலத்தில் அதனை நாம் பின்பற்றுவதில்லை.
 இதனால், இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், நினைவாற்றல் குறைபாடு, நீரிழிவு நோய், கவனச் சிதறல், மன அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
 சரியான தூக்கத்துக்கு உணவுப் பழக்கம் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. அதற்கு உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தை முதலில் முறைப்படுத்துவது அவசியம். சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
 செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி என அனைத்து வகையான மின்னணு சாதனங்களையும் துôங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அணைத்து விடுவது அவசியம் என்றார் அவர்.
 "யோகாவின் மகத்துவம்'
 இந்தியாவில் யோகாவின் மகத்துவம் பலருக்குத் தெரிவதில்லை என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:
 நோய்கள் வராமல் தடுப்பதற்கும், வந்தால் அதனை சரி செய்வதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் யோகா எனப்படும் மகத்துவம் நிறைந்த பயிற்சியை அன்றாடம் மேற்கொண்டனர்.
 ஆனால், இன்றைக்கு அந்தநிலை மாறிவிட்டது. யோகாவை மத ரீதியாக அடையாளப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. அது தவறு; யோகாவுக்கும், மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது, ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழிமுறை என உணர்ந்து அப்பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT