சிஆர்பிஎப் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎப் காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎப் காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஆவடி, ராஜீவ்காந்தி நகரில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிஆர்பிஎப் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் மேற்குவங்க மாநிலம், ஜெய்பால்குடி பகுதியைச் சேர்ந்த சச்சின் ராய் மகன் கைலாஷ் சந்தர்ராய் (25) கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், சந்தர்ராய் வியாழக்கிழமை காலை அங்குள்ள கவாத்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் காவலர்களின் துப்பாக்கிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் காலை 6.30 மணியளவில் அந்தப் பகுதியில் இருந்து திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் அதிகாரிகளும், வீரர்களும் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.அப்போது சந்தர்ராய், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு காவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆவடி டேங்க் தொழிற்சாலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்தர்ராய் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சந்தர்ராய் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்று விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சந்தர்ராய் குடும்ப பிரச்னையின் காரணமாகவும், மன அழுத்தத்தின் காரணமாகவும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.