சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப் பயன்படும் இ-சலான் கருவி கேமரா வசதியுடன் விரைவில் போக்குவரத்துப் போலீஸாருக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் விதிமுறைகளை மீறும்போது போலீஸார் அபராதம் விதிப்பதை நேரலையில் உயர் அதிகாரிகள் காண முடியும்.
இந்தியாவில் அதிக விபத்து நடைபெறும் நகரங்களில் சென்னை முதலிடத்தை வகிக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு மொத்தம் 7,466 சாலை விபத்துகள் நடந்தன. அதில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2016-இல் ஏற்பட்ட உயிரிழப்பைக்காட்டிலும், 2017-இல் 158 பேர் அதிகம் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பெருநகரங்களில் நடைபெறும் மொத்த விபத்துகளில் 14.9 சதவீதம் சென்னையில் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அதிநவீன தொழில்நுட்பம்: இதன் விளைவாக சென்னை காவல் துறை சாலை விபத்தையும், உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக தொழில்நுட்ப ரீதியாகவும் சென்னை காவல் துறை தயாராகி வருகிறது.
சென்னை போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கு, போக்குவரத்து விதிமீறல்களில் சிக்குவோருக்கு அபராதம் விதிக்க இ-சலான் கருவி கடந்த 2011-இல் வழங்கப்பட்டது. அப்போது ரூ.2.83 கோடி மதிப்பில் 300 கருவிகள் வாங்கப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு அறை, சர்வர் அமைக்கப்பட்டது.
அது வரை அபராதப் புத்தகம் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இ-சலான் கருவி வந்ததும், அபராதத்தைப் பதிவு செய்து வாகன ஓட்டிகளுக்கு ரசீது வழங்கினர். இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்தது. இப்போது சென்னையில் மட்டும் தினமும் 10 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு இ-சலான் கருவி மேம்படுத்தப்பட்டு புதிய வடிவில் வழங்கப்பட்டது. இதன் மூலம் போலீஸார், மிகவும் விரைவாக வழக்குகளைப் பதிய முடிந்தது. இந்நிலையில் வாகன ஓட்டிகள், தங்களின் ஏடிஎம் கார்டுகள் மூலம் அபராதம் செலுத்தும் வகையில் கடந்த 2016 ஜூலை மாதம் 100 ஏடிஎம் கார்டு ஸ்வைப் இயந்திரம் போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டது.
கேமராவுடன் இ-சலான் கருவி: இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் கேமரா, ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பம், ஏடிஎம் கார்டு ஸ்வைப் வசதியுடன் கூடிய இ-சலான் கருவியை சென்னை காவல்துறை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுமார் 300 கருவிகளை வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து போலீஸார் செயல்பாட்டை இ-சலான் கருவி கேமரா மூலம் நேரலையில் உயர் அதிகாரிகள் காண முடியும் என சென்னை காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இதனால், போக்குவரத்து போலீஸார் முறைகேட்டில் ஈடுபட நினைத்தாலோ, வாகன ஓட்டிகள் போக்குவரத்துப் போலீஸாரிடம் தகராறு செய்தாலோ உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்ற அவர் மேலும் கூறியதாவது:
தற்போது ஏடிஎம் கார்டில் பணம் வசூலிக்க தனியாக ஸ்வைப்பிங் இயந்திரம் உள்ளது. ஆனால் இனி வழங்கக் கூடிய இ-செலான் கருவியில் ஸவைப்பிங் வசதியும் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் போலீஸார் ஏடிஎம் கார்டு ஸ்வைப்பிங் கருவியை சுமக்க வேண்டிய தேவையில்லை.
வெளிப்படைத் தன்மை: ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பம் புதிய இ-சலான் கருவியில் பொருத்தப்பட்டிருப்பதால், போலீஸார் குறிப்பிட்ட இடத்தில் உள்ளனரா, வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனரா என்பதையும் கண்காணிக்க முடியும். இந்த புதிய இ-சலான் கருவியின் மூலம் போக்குவரத்து போலீஸாரின் பணி பளு குறையும்.
அதே நேரத்தில் போலீஸார் இப்போதுள்ளதை விட இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட முடியும். அவர்கள் மீது இப்போது கூறப்படும் சில புகார்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.