பிளஸ் 1 தேர்வில் தோல்வி: மறுதேர்வு எழுத மாணவிக்கு அனுமதி
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்த மாணவிக்கு மறுதேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்த மாணவிக்கு மறுதேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாணவி ஷாரோன் நிவேதிதாவின் தந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:
எனது மகள் கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். அறிவியல் பாடப் பிரிவில் படித்து வந்த அவர், கடந்த மார்ச் மாதம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சலில் இருந்து மீண்டு வருவதற்குள் நடத்தப்பட்ட பிளஸ் 1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய 3 பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார்.
இதையடுத்து எங்களை அழைத்த பள்ளி நிர்வாகம், தேர்வில் தோல்வியடைந்துவிட்ட எனது மகள் அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால், வணிகவியல் பாடப் பிரிவுக்கு மாற வேண்டும்; இல்லையெனில் இடமாற்றுச் சான்றிதழை வழங்கிவிடுவதாக தெரிவித்தது. மறுமுறை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்கவில்லை. எனது மகள் தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வெழுத அனுமதிக்கவும், 2018- 19 -ஆம் கல்வியாண்டில் அதே பள்ளியில் பிளஸ் 2 படிப்பைத் தொடரவும் அனுமதியளிக்க உத்தரவிட வேணடும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நன்றாக படிக்கும் மாணவிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக தேர்வை சரியாக எழுத முடியவில்லை. எனவே பள்ளி நிர்வாகம் தோல்வியடைந்த 3 பாடங்களிலும் தேர்வு எழுத மாணவியை அனுமதிக்க வேண்டும்' என வாதிட்டார்.
"சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமே மீண்டும் மறுதேர்வு எழுத முடியும். சம்பந்தப்பட்ட மாணவி 3 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவரைத் தேர்வெழுத அனுமதிக்க முடியாது. ஒருவேளை தேர்வெழுத அனுமதித்து அவர் தேர்ச்சி பெற்றால் மீண்டும் இதே பள்ளியில் பிளஸ் 2 படிப்பேன் என உரிமை கோரக் கூடாது' என பள்ளி நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி தோல்வியடைந்த இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் மீண்டும் தேர்வெழுத பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மாணவி 3 பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துவிட்டால் மீண்டும் அதே பள்ளியில் படிப்பேன் என உரிமை கோரக் கூடாது. ஒருவேளை 3 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டால், அவரது இடமாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம் எந்தவிதமான நிர்பந்தமுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.