சென்னை

கல்லூரி மாணவிகளுக்கு திறன் வளர்பயிற்சி: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

DIN

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் (NSDC) ஆதரவில் செயல்பட்டு வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான திறன் வளர்ச்சி கவுன்சில் (MESC), சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரி ஆகிவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி இந்தக் கல்லூரி ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றுடன் கலை மற்றும் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்க சிறந்த அம்சங்களை உடைய நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டு இதற்கான அதிநவீன பயிற்சி மையம் இந்தக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் எம்.இ.எஸ்.சி. தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மோஹித் சோனி, கல்லூரியின் செயலாளர் எஸ். அபயகுமார் ஜெயின் ஆகியோர் கையெழுத்திட்டனர். பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரும், எம்இஎஸ்சி தலைவருமான சுபாஷ் கய் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பங்கேற்றார்.
இது குறித்து அபயகுமார் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான திறன் வளர்ச்சி கவுன்சில் இந்தத் துறைக்கான தேசிய அளவிலான தரநிலைகளை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது தொடர்பான சந்தை தகவல்களையும் அது உருவாக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு, ஒளியமைப்பு, அனிமேஷன், கணினி விளையாட்டுகள் போன்ற பலவற்றிலும் தனி பயிற்சி வகுப்பு, பாடத் திட்டங்கள் இந்தக் கல்லூரியில் அறிமுகம் செய்யப்படும். இவை புத்தகப் படிப்பாக மட்டுமின்றி செயல்முறை பாடங்களையும் கொண்டதாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கல்லூரி முதல்வர் பூர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT