ஆழம் நிறைந்த வட சென்னை கடற்கரையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இருப்பினும் கொளுத்தும் வெயிலின் வெப்பத்தைத் தணிக்க முற்பட்டு ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து கடலில் குளிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உயிரிழப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற அழகான கடற்கரைகளில் ஒன்றான மெரீனா கடற்கரையை தன்னகத்தே கொண்டது சென்னை மாநகரம். சென்னைக்கு சுற்றுலா வருவோரின் முதல் தேர்வு இந்தக் கடற்கரைதான். காலை, மாலை நேரங்களில் பொழுதுபோக்கு, நடைப்பயிற்சி, காற்று வாங்க என லட்சக்கணக்கானோர், மெரீனாவைப் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல், பட்டனப்பாக்கம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்டவைகளும் தென் சென்னை மக்களுக்கான பொழுதுபோக்கிற்கான இடமாக இருந்து வருகிறது.
ஆனால், மெரீனா கடற்கரையைப் போல வட சென்னையில் மணல் பரப்பு அதிகமாக இருக்கும் கடற்கரை பகுதி இல்லை. தொடரும் கடலரிப்பால் வட சென்னையில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு, கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளில் கடலில் மூழ்கி விட்டதாக இங்கு வசிக்கும் முதியவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடலரிப்பைத் தடுக்க காசிமேடு முதல் எண்ணூர் வரை சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைக்கற்களாலான தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சில இடங்களில் மணல் திட்டுக்கள் தோன்றியுள்ளன. இம்மணல் திட்டுக்களைக் காணும் பொதுமக்கள், இங்குள்ள கடற்கரையில் குளித்து வருகின்றனர். ஆனால் சில மீட்டர் தூரத்திலேயே ஆழ்கடல் உள்ளது என்பதை சிறுவர்களும், பொதுமக்களும் அறிந்திருக்கவில்லை என்பதால் கடலில் மூழ்கி உயிரிழப் போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்:
காசிமேடு பகுதியில் செரியன் நகரிலும், திருவொற்றியூர் பகுதியில் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம், ஒண்டிக்குப்பம், பலகைத் தொட்டிக் குப்பம், ராமகிருஷ்ணா நகர், பாரதியார் நகர் உள்ளிட்ட இடங்களிலும், எண்ணூர் பகுதியில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட இடங்களிலும் சிறிய அளவிலான மணல் பரப்பைக் கொண்ட கடற்கரைகள் உள்ளன. இதில், ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில்தான் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால், இங்கு தொடர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக் மாணவர்கள் ஐந்து பேர் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட அலையில் சிக்கி அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். உடனே, அருகில் இருந்த மீனவர்கள் மூன்று பேரை மட்டும் மீட்க முடிந்த நிலையில் இரண்டு பேர் இறந்து விட்டனர். அடுத்த ஒரிரு நாள்களிலேயே காசிமேடு அருகே கடலில் குளித்த மற்றொரு சிறுவன் கடலலையில் சிக்கி இறந்து போனார். வட சென்னையில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இதுபோல நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் அரங்கேறுவது இயல்பாகி வருகிறது. இந்நிலையில், கோடை காலம் தொடங்கி விட்டதால் கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க தினமும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள், பொதுமக்கள் கடலில் குளித்து வருகின்றனர். எனவே உயிரிழப்பு தொடராமல் இருக்க பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
இது குறித்து மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக. வட்டச் செயலாளர் என்.சி.குப்புராஜ் கூறியது:
ஆழமான கடற்கரையில் குளிக்கிறோம் என்ற பயம் சிறுவர்களுக்கோ, பொதுமக்களுக்கோ இருப்பது இல்லை. மேலும் கடலலையின் சீற்றம் எந்த அளவுக்கு தங்களை இழுத்துச் செல்லும் என்பதையும் இவர்கள் அறிந்திருப்பதில்லை. இவர்களை போலீஸார் எச்சரித்தாலும் அதனை பொருள்படுத்துவதில்லை. இதனால் உயிரிழப்பு தொடர்கிறது. இதனைத் தடுக்க இப்பகுதியில் பொதுமக்கள் பயமின்றி குளிப்பதற்கு ஏதுவாக தூண்டில் வளைவுகளில் தென்னை மரம் போல வளைவுகளை அமைத்து ராட்சத அலைகளைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் மணல் பரப்பும் அதிகரிக்கும். தற்போது ஆழமான பகுதிகளை கடலோரக் காவல் படையின் உதவியுடன் கண்டறிந்து பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் சிவப்பு நிற மிதவைகளை மிதக்க விட வேண்டும். போலீஸாரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் செல்பவர்களை போலீஸார் எச்சரிக்கை செய்து வெளியேற்றினால் உயிரிழப்பைத் தடுக்க இயலும் என்றார் குப்புராஜ்.
கடற்கரை என்றால் குளிப்பதற்குத்தானே என்று நினைக்கும் பொதுமக்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில், இப்பகுதியில் கடற்கரையை மாற்றியமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் பொதுமக்களும், சிறுவர்களும் எல்லை மீறாமல், ஆர்வம் காரணமாக ஆழ்கடலுக்குச் செல்லாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.