சென்னை

கலந்தாய்வு சர்ச்சை: மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி

DIN

மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முதலில் அறிவிக்கப்பட்டு, அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 எம்பிபிஎஸ் தேர்வுகள் நடைபெற்று வருவதால்தான், கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.
 ஆனால், இதற்கு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், திடீரென கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதும், பின்னர் அதை ரத்து செய்ததும் ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் கூறினர்.
 மாநிலம் முழுவதும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், இணை பேராசிரியர்களும் அதில் பணியாற்றி வருகின்றனர். அதேவேளையில், அங்கு காலியாக இருக்கும் பல பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படவில்லை என்பதும், இணை பேராசிரியராக இருப்பவர்களுக்கு 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.
 இந்நிலையில், இதுதொடர்பான அறிவிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 15) மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (பிப்.18) நடைபெறும் என்றும், அதில் தகுதியானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இந்தச் சூழலில், அதற்கு சில மணி நேரத்துக்குப் பிறகு அதை ரத்து செய்து ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை விமர்சித்தனர்.
 இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்புவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 ஆனால், அதன் காரணமாக எம்பிபிஎஸ் தேர்வுகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அதனை ஒத்திவைத்துள்ளோம். விரைவில் புதிய தேதி அறிவிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT