முகப்பு
சென்னை

புதர் காடாக மாறிய அரசு புனர்வாழ்வு மருத்துவமனை

சென்னை, கே.கே. நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை போதிய பராமரிப்பின்றி புதர்க் காடாகக் காட்சியளிப்பதுடன், அவ்வளாகத்திலுள்ள சில கட்டடங்கள் மோசமான நிலையில்

Updated On : 26 பிப்ரவரி 2019, 12:59 pm IST
பகிர்:


சென்னை, கே.கே. நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை போதிய பராமரிப்பின்றி புதர்க் காடாகக் காட்சியளிப்பதுடன், அவ்வளாகத்திலுள்ள சில கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளதால்,நோயாளிகளும்,  பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவ மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 
மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளை அளிப்பதற்காகவும், இயன் முறை சிகிச்சைகள் மூலமாக அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வைப்பதற்காகவும் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை கடந்த 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்தான் பல்வேறு துறைகள் இயங்கி வந்தன. அதன் பிறகு, இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு புனர்வாழ்வு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. கே.கே. நகரில் உள்ள அந்த மருத்துவமனை ஏறத்தாழ  5.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 60 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, ஊடுகதிர் பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் புறநோயாளிகளாகவும், மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெறவும் இங்கு வருகின்றனர். இதைத் தவிர, இயன்முறை படிப்புகள் பயிலும் மாணவியர் விடுதியும் இவ் வளாகத்தில் அமைந்துள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர்.
நகரின் பிரதான பகுதியில் அதிக இடவசதியுடன் அந்த மருத்துவமனை செயல்பட்டாலும், அந்த வளாகம் முறையான பராமரிப்பின்றி  இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.  குறிப்பாக, மாணவியர் விடுதி முகப்புப்பகுதி  முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் அச்சத்துடனேயே அப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு, துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையே  காரணம் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, பராமரிப்பு செலவுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
ஏற்கெனவே, போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறையுடன் புனர்வாழ்வு மருத்துவமனை இயங்கி வருவதாகவும், மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமாக பராமரிப்பதற்குக் கூட பணியாளர்கள் இல்லாத நிலை நீடிப்பதாக  மாற்றுத் திறனாளிகள்  வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரமேஷ் கூறியதாவது:அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்வதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதர் சூழ்ந்திருக்கும் பகுதிகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.