யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி
யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருப்பது குறித்து...
குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மு.க.ஸ்டாலின்-காவல்துறைக்கு நன்றி
Advertisement
Advertisement
விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாள்களில் இந்த வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி.
குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.
நம்புகிறேன்
அடுத்தடுத்த பதிவில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேற்கு மண்டலத்தில் தொடங்கி தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டில் பாதியை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது.
தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்.
பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு.
சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது என கனிமொழி கூறியுள்ளார்.