லஞ்சம் : 3 சார்-பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு
லஞ்சப் புகார் தொடர்பாக சென்னை ராயபுரம், அசோக்நகர், திருப்போரூர் சார்-பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
லஞ்சப் புகார் தொடர்பாக சென்னை ராயபுரம், அசோக்நகர், திருப்போரூர் சார்-பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
சென்னை கே.கே.நகரில் உள்ள அசோக்நகர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் சில ஊழியர்கள் கையூட்டு வாங்குவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கடந்த 18-ஆம் தேதி போலீஸார்,அங்கு மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைப்போல, திருப்போரூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சமும், ராயபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.74 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் உள்ள அசோக்நகர் சார்- பதிவாளர் பிரவீணா வீட்டில் நடத்திய சோதனையில், அங்கிருந்த சொத்து ஆவணங்களையும், இதைப்போல, திருவண்ணாமலையில் உள்ள திருப்போரூர் சார்-பதிவாளர் பழனியின் வீட்டில் கணக்கில் வராத ரூ.5.90 லட்சத்தையும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ராயபுரம் சார்-பதிவாளர் வெங்கடேசன் வீட்டில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கம், சொத்து ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சார்-பதிவாளர்கள் மீது வழக்கு: இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சார்-பதிவாளர்கள் 3 பேர் மீதும், அங்குள்ள சில ஊழியர்கள் மீதும் 3 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, ராயபுரம் சார்-பதிவாளர் வெங்கடேசன், அந்த அலுவலக தாற்காலிக ஊழியர் சுந்தர், ஆவண எழுத்தர் பாத்திமா என்ற வெண்மால், அசோக்நகர் சார்-பதிவாளர் பிரவீணா, அலுவலக இளநிலை உதவியாளர் சுகவனம், கணினி ஆபரேட்டர் உமா பரமேஸ்வரி, கேமரா ஆபரேட்டர் ரேவதி, திருப்போரூர் சார்-பதிவாளர் பழனி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகளிலும் மொத்தம் 8 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.