சென்னை

மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள்: உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண பள்ளிகளில் குழுக்கள்

அ. ஜெயச்சந்திரன்


தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ,  மாணவிகளின் உளவியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மூத்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் தலைமையில் உளவியல் ஆலோசனைக் குழுக்கள் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் மாணவர்கள்  மதிப்பெண் குறைதல், பெற்றோர் திட்டுதல், ஆசிரியர் திட்டுதல் என்று தன்னிலை சார்ந்த செயல்களில் குறைகளை ஏற்றுக்கொள்ள  முடியாமல் வளரும் பருவத்தில் உள்ள மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இது ஒருபுறம் என்றால், மாணவர்களின் வளரும் சூழலும் அவர்களின்  மனநலனை பாதிக்கிறது. திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், சமூக ஊடகங்கள் என பல நிலைகளிலும் மனநலன் பாதிக்கும் நிலையில், இன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள், கொலைகள், கொலை முயற்சி, ஆசிரியர்கள்  மீது தாக்குதல் போன்ற குற்றச்செயல்களும் ஆங்காங்கே நடந்து சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. 
குறிப்பாக, தற்போதைய மாணவர் சமுதாயம் சிறிய தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.  கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை செய்துள்ளனர். 
இப்போது நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தமிழகத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பள்ளிகளிலும் மாணவர், மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பணி மூப்பு ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாசிரியர்களாக நியமித்து உளவியல் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில்...: இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: 
இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவப் பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில்  ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு மற்றும் தகுதி, திறமை வாய்ந்த ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உளவியல் ஆலோசனை வழங்க பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பொறுப்பாசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.
அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டாயம்: இந்த உளவியல் பொறுப்பாசிரியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென பள்ளிகளில் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT