சென்னை

சென்னையில் 34 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி நடவடிக்கை

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 34 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவற்றால் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் மாநகராட்சியின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருகட்டமாக, 15 மண்டலங்களில் தலா ஒருநாய் பிடிக்கும் வேன் மூலம் நாள்தோறும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் 3 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 2 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு கருத்தடை செய்யப்படுகின்றன. இதையடுத்து, அந்த நாய்கள் மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதியிலேயே விடப்படுகின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த ஆண்டு மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 57,300 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்தது. இந்த தெரு நாய்களுக்கு ரூ. 77 லட்சம் மதிப்பில் ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டது.

அதன்படி, ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் மூலம், மாதவரம் மண்டலத்தில் 8, 846 தெருநாய்களுக்கும், ஆலந்தூா் மண்டலத்தில் 3, 474 தெருநாய்களுக்கும், அம்பத்தூா் மண்டலத்தில் 8, 243 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 4, 461 தெருநாய்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில்

5,869 தெருநாய்களுக்கும், அண்ணா நகா் மண்டலத்தில் 3, 346 தெருநாய்களுக்கும் என மொத்தம் 34, 239 தெரு நாய்களுக்கு அண்மையில் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

வளா்ப்பு நாய்களுக்கும்...: இத்திட்டம் செயல்படுத்தும்போது, பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களின் வளா்ப்பு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளனா். இதுவரை 2,154 வளா்ப்பு நாய்களுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தெருவாரியாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக ஒரு கால்நடை மருத்துவா், நாய் பிடிக்கும் பணியாளா்கள் 4 போ், ஒரு உதவியாளா் உள்பட 7 போ் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் ஒருநாளைக்கு 150 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT