சென்னை

பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: மன நல காப்பக இயக்குநர் தகவல்

DIN


சென்னை முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று கீழ்ப்பாக்கம் மன நல காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்கொலை தடுப்பு தின  சிறப்பு நிகழ்ச்சிகள் கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் காப்பகச் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். அதன் தொடர்ச்சியாக சிறப்பு பட்டிமன்றங்கள் நடைபெற்றன. 
தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது, மன நல காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகா பேசியதாவது: 
இந்தியாவில் சமீப காலமாக தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உலகளாவிய தரவுகளும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. 
நமது நாட்டில் 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை இருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு தற்கொலைதான் என்ற தவறான மனோநிலை பலருக்கும் உள்ளது.  ஆனால், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்னைகள் ஒருபோதும் தீர்வதில்லை. மாறாக, அந்த நபரது செயலின் தாக்கத்தால் அவரைச் சுற்றியிருக்கும் 135 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
சமகால பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநிலை திடமாக இல்லாதது வேதனையளிக்கிறது.  
சமூகப் புரிதல்கள் இல்லாததாலும், மனதளவில் பலவீனமாக இருப்பதாலும் சிறிய தோல்விகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். 
அதைத் தடுக்கும் விதமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மன நலக் காப்பகம் சார்பில் நடத்த உள்ளோம். ஏற்கெனவே சில இடங்களில் அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். வரும் நாள்களில் அதனை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT