சென்னை

3-ஆக பிரிக்கப்படுமா சென்னை மாநகராட்சி?

பா. இளையபதி


சென்னை: அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவில் சென்றடையவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வரும் நிலையில், அதை முன்னுதாரணமாகக் கொண்டு  பெருநகர சென்னை மாநகராட்சியையும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

உலகின் பழைமையான இரண்டாவது உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையைக் கொண்டுள்ளது தற்போதைய பெருநகர சென்னை மாநகராட்சி. ஆங்கிலேயர் காலத்தில் 1687-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி, அப்போதைய  கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் சர் ஜோசியா சைல்ட் என்பவர், சென்னை மாநகராட்சியாக உருவாக்குவதற்கான திட்டத்தை தீட்டினார். 

இதைத் தொடர்ந்து, 1688 செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னை மாநகராட்சியாக மாற்றப்பட்டு, ஒரு மேயர் மற்றும் உறுப்பினர்களாக 8 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதன் முதல் மேயராக கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த நாடேனியல் ஹிக்கின்சன் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் 1801-ஆம் ஆண்டு மாநகராட்சி கலைக்கப்பட்டது. ஆனால், 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மீண்டும் உருவாக்கப்பட்டது. அப்போது, சென்னை மாநகராட்சியின் கெளரவ மேயராக சர். பிட்டி. தியாகராயர் நியமிக்கப்பட்டார்.  கடந்த 1933-ஆம் ஆண்டு மாநகராட்சி மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, எம்.ஏ.முத்தையா செட்டியார் மேயரானார். இதைத் தொடர்ந்து 1973-ஆம் ஆண்டு வரை ஜாதி மற்றும் சமய அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை மேயர்கள் நியமிக்கப்பட்டனர். மாமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் மேயராக பதவி வகித்தவர்களில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ந.சிவராஜ், டி.செங்கல்வராயன், மு.அ.சிதம்பரம் செட்டியார், வீ.ஆர்.ராமநாத ஐயர், கே.என்.சீனிவாசன், ஆர்.சிவசங்கர் மேத்தா, எம்.எஸ்.அப்துல்காதர்,  சிட்டிபாபு போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். கடந்த  1973-ஆம் ஆண்டு மஸ்டர் ரோல் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி கவுன்சில் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறப்பு அதிகாரிகளால் மாநகராட்சி நிர்வகிக்கப்பட்டது. 

அதன் பிறகு கடந்த 1996-ஆம் ஆண்டு மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, மு.க.ஸ்டாலின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கராத்தே தியாகராஜன் (பொறுப்பு),  மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி போன்றோர் அடுத்தடுத்து மேயர் பதவியை அலங்கரித்தனர்.

80 லட்சம் மக்கள் 

174 சதுர கி.மீ. பரப்பளவுடன், 16 சட்டப் பேரவைத் தொகுதிகள், 10 மண்டலங்கள் மற்றும் 155 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சி மன்றம், கடந்த 2011-ஆண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சென்னையையொட்டி உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து 426 சதுர கி.மீ. பரப்பளவுடன் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள், 15 மண்டலங்கள், 200 வார்டுகள் என பிரிக்கப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

வடசென்னையில் மணலி மண்டலம், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் மண்டலம், மத்திய சென்னையில் அம்பத்தூர் மண்டலம் ஆகியவை தற்போது இதன் எல்லைகளாக உள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்பது தெரியவந்துள்ளது. 

இது, மேலும் அதிகரித்து, கடந்த மக்களவைத் தேர்தலின்போது சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 22 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையே  62 லட்சத்து 53 ஆயிரத்து 669 ஆக  இருந்தது. 

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதியில்  சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதும், நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 6 லட்சம் மக்கள் சென்னைக்கு வந்து செல்வதும் தெரியவந்துள்ளது.  இனி வரும் காலங்களில் மக்கள் தொகை ஒரு கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்கிப் பெருகி, பரந்து விரிந்து வரும் சென்னை மாநகரம் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே அதிகரித்து வருகிறது.

தற்போது ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் உள்ள ஆணையர் தலைமையில் இயங்கும் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒரு இணை ஆணையர்,  3 துணை ஆணையர்கள், 3 வட்டார துணை ஆணையர்கள், 15 மண்டல அலுவலர்கள் உள்பட சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

என்னதான் திறமைமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் பரந்து, விரிந்து  வரும் சென்னையைப் பராமரிப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ரூ.3,547 கோடி பட்ஜெட் 

மக்களின் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கல்வி மற்றும் கழிவுப் பொருள்கள் மேலாண்மை, சாலைகள் பராமரிப்பு, வருவாய், மழைநீர் வடிகால் போன்ற 14 துறைகள் மாநகராட்சியில் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, 2019-20-ஆம் ஆண்டுக்கு ரூ. 3,547 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள், உலக வங்கிகள் நிதி உதவியுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. 

சுமார் 80 லட்சம் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடத்தில் உள்ள மாநகராட்சியில் அதிகாரம் பரவலாக்காமல் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதும், 200 வார்டுகளைக் கொண்ட பெரும் பகுதியை  ஒரே மேயர், ஆணையர் தலைமையில் நிர்வகிப்பதும் பெரும் சிக்கலானதாகவே கருதப்படுகிறது.

நிர்வாக வசதிக்காக தமிழக அரசு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி வருவது பரவலாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோன்று சிறிய நகரங்கள் கூட மாநகராட்சிகளாக மாற்றப்படுவதும் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், 22 சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநகர், ஒரே மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயக்குவது மக்களுக்கான சேவையை விரைந்து செய்வதில் சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டங்கள் பிரிக்கப்படுவதை முன்னுதாரணமாகக் கொண்டும் இதற்கு முன்னதாக தில்லி பெருநகர மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுக் கொண்டும் சென்னை மாநகராட்சியையும்  பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மூன்றாகப் பிரிக்க வேண்டும்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் கூறியது: சென்னை மாநகராட்சியின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டு 22 சட்டப் பேரவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், வார்டுகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், ஒரு வார்டில்  வாக்காளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாகவும் ஒரு வார்டில் 6 ஆயிரமாகவும் உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டிய வசதிகள் முறையாகக் கிடைப்பதில்லை. மக்கள் தங்கள் அன்றாடத் தேவைக்காக சென்னை மாநகராட்சியை நம்பியே உள்ளனர். மேலும் பெரிய அளவிலான பகுதி என்பதால் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை நிர்வகிப்பதில் நிர்வாக ரீதியிலும், நடைமுறையிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வகையில், பெருநகர தில்லி மாநகராட்சி கடந்த 2011-இல் கிழக்கு தில்லி, வடக்கு தில்லி, மத்திய தில்லி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. 

இதை முன்னுதாரணமாகக் கொண்டும், சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை எட்டும் நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியை வடசென்னை மாநகராட்சி, தென் சென்னை மாநகராட்சி, மத்திய சென்னை மாநகராட்சி என்று மூன்றாகப் பிரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரிக்கும்போது, ஒரு மாநகராட்சிக்கு 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளவாறும் வார்டுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கும் வகையிலும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கான சேவையை விரைந்து செய்ய முடியும் என்றார்.

வளர்ச்சிகள் தடைபடும்

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், "பெருநகர மாநகராட்சி என்பதாலேயே சீர்மிகு நகரத் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இதை மூன்றாகப் பிரிக்கும்பட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தடைபடும்.  மாநிலத்தின் தலைநகரம் பெருநகர மாநகராட்சியாக இருப்பதே பலவகைளில் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

சலுகைகள் கிடைக்காது

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறுகையில், "சென்னை பெருநகர மாநகராட்சியாக இருப்பதுதான் தமிழகத்துக்கான அடையாளமாகும்.  பெருநகர மாநகராட்சியாக இருப்பதினால்தான், சென்னைக்கு உலக நாடுகள் வளர்ச்சிக்கான நிதியை வழங்குகின்றன. இதை மூன்றாகப் பிரித்தால், வளர்ச்சிப் பணிக்களுக்கான நிதி உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மூன்றாகப் பிரிப்பதை தவிர்த்து, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை வேண்டுமானால், ஆவடி மாநகராட்சியுடனோ அல்லது தாம்பரத்தை மாநகராட்சியாக உருவாக்கி அதனுடனோ இணைக்கலாம்.  மக்கள் தொகை அல்லது வீடுகளின் அடிப்படையில் வார்டுகளை மறுவரையறை செய்வதன் மூலம் அனைத்துப் பகுதிகளையும் எளிதில் நிர்வகிக்க முடியும்' என்றார்.

பிரிப்பது நல்லது

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் எம்.பி.விஜயகுமார் கூறுகையில், "மாநகராட்சியின் பணி என்பது மக்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்யும் மிக முக்கியமானப் பணியாகும். 2003-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 10 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி இருந்தபோதே அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தை விட மாநகராட்சிக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. அந்த வகையில், சென்னை மாநகராட்சியை மூன்றாகப் பிரிப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

சென்னை மாநகராட்சி அதிக நிதி வருவாய் உள்ள பகுதியாகும். முறையாக வரிகள் வசூலித்தாலே மாநகராட்சியை நல்ல முறையில் நிர்வகிக்கலாம்' என்றார்.

அதிகாரம் பரவலாக்கப்படும்

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல் கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை முறையாக கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மழை மற்றும் புயல் காலங்களில் சென்னை மாநகராட்சி பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதுபோன்ற காலங்களில் புனரமைப்பு பணி என்பது சிக்கலாக உள்ளது.   மாநகராட்சியைப் பிரிக்கும்போது, ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனித்தனியாக ஆணையர்கள், மேயர்கள் என அதிகாரம் பரவலாக்கப்படும்பட்சத்தில்  மக்களுக்கான தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதில், ஆரோக்கியமான போட்டியை  ஏற்படுத்த முடியும்' என்றார்.


எண்    மண்டலம்

I    திருவொற்றியூர்
II    மணலி
III    மாதவரம்
IV    தண்டையார்பேட்டை
V    ராயபுரம்
VI    திரு.வி.க. நகர்
VII    அம்பத்தூர்
VIII    அண்ணா நகர்
IX    தேனாம்பேட்டை
X    கோடம்பாக்கம்
XI    வளசரவாக்கம்
XII    ஆலந்தூர்
XIII    அடையாறு
XIV    பெருங்குடி
X    சோழிங்கநல்லூர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT