கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரிப்பு: மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரித்ததால், மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்தது.
சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரித்ததால், மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்தது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் 9 ஆயிரம் டன் முதல் 11 ஆயிரம் டன் வரை பெரிய வெங்காயம் லாரிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த மழையால் வெங்காயப் பயிர்கள் நாசமாகி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாள்களாக வெங்காய வரத்து 6 ஆயிரம் டன் ஆகக் குறைந்தது.
வரத்து குறைந்ததால், மொத்த விலையில் ரூ.25-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் படிப்படியாக விலை உயர்ந்து தற்போது 50-ஆக எதிரொலித்துள்ளது. இந்த விலை உயர்வு சில்லறை விலையில் கடுமையாக எதிரொலித்தது.
திடீரென அதிகரித்த வரத்து: கடந்த 20-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடைகள், தினசரி சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமையும் நீடித்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை ஆந்திர மாநிலத்திலிருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஏறத்தாழ 80-க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 10 ஆயிரம் டன் வெங்காயம் விற்பனைக்கு வந்ததால் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.2,500-இல் இருந்து ரூ.2,200 ஆகக் குறைந்தது.
இதைத் தொடர்ந்து, மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்து ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. எனினும் இந்த திடீர் விலை குறைவு சில்லறை விற்பனைச் சந்தையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
வெங்காயத்துக்கு தற்போது நல்ல விலை கிடைத்துள்ளதால், அதை உடனடியாக விற்க வேண்டும் என்பதற்காக ஆந்திர வியாபாரிகள் இருப்பில் உள்ள வெங்காயத்தை போட்டி போட்டுக் கொண்டு கோயம்பேடுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எப்போது குறையும்?: இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன், வெங்காய வியாபாரி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூறியது:
சென்னையில் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த பெரிய வெங்காயத்தையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக 80 சதவீதம் ஆந்திர மாநில வெங்காயத்தையே பொதுமக்கள் விரும்புகின்றனர். ஆனால் தென் மாநிலங்களில் வெங்காயம் தற்போது மிகவும் குறைவான அளவிலேயே இருப்பில் உள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயமே கிடங்கில் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த புதிய வெங்காயம் டிசம்பர் முதல் வாரத்தில்தான் விற்பனைக்கு தயாராகும். இதனால் பெரிய வெங்காயம் மொத்த விலையில் ரூ.35 முதல் ரூ.45 வரையிலான இடைவெளியில் மாறிக் கொண்டே இருக்கும். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் வெங்காயத்தின் விலை ஓரளவுக்கு குறையலாம். ஏனெனில் நாசிக் பகுதியிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சந்தைக்கு புதிய வெங்காயம் விற்பனைக்கு வரும்போது விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றனர்.