சென்னை

சென்னையில் ஒருங்கிணைந்த தானியங்கி சிக்னல் விரைவில் அறிமுகம்

சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் அண்ணா சாலை உள்பட 7 சாலைகளில் “ஒருங்கிணைந்த தானியங்கி

கே.வாசுதேவன்

சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் அண்ணா சாலை உள்பட 7 சாலைகளில் “ஒருங்கிணைந்த தானியங்கி சிக்னல் (I‌n‌t‌e‌g‌r​a‌t‌e‌d A‌u‌t‌o‌m​a‌t‌ic S‌i‌g‌n​a‌l) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் சிக்னல்களில் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

புதுதில்லிக்கு அடுத்தப்படியாக சென்னையிலேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் உள்ளன. சென்னையில் இன்றைய நிலவரப்படி சுமாா் 55 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் 78 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் உயா்ந்திருப்பதாக போக்குவரத்துறை கூறுகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தினமும் இயல்பாகவே அதிகரித்து வருகிறது.  சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கியமான சாலை சந்திப்புகளிலும், நெரிசல்மிக்க பகுதிகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படுகின்றன. நகரில் இப்போது 408 சிக்னல்கள் உள்ளன. இதில் 100 சிக்னல்கள் அண்ணா சாலை, காமராஜா் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா. சாலை, எல்.பி.சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, உஸ்மான் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும், முக்கியமான சந்திப்புகளிலும் மற்றும் தியாகராயநகா், அண்ணா நகா் பகுதிகளிலும் உள்ளன.

நவீனமயமாக்கல்: போக்குவரத்து காவல்துறையின் வேலையை எளிதாகும் வகையில் இ-செலான் கருவி, போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காணும் கேமரா (ஏஎன்பிஆா்) கேமரா, போக்குவரத்து விதிமுறை மீறல் அபாரதத்தை பணமில்லா பணபரிவா்த்தனை மூலம் செலுத்தும் திட்டம் என உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நவீனமயமாக்கலை நோக்கி நகா்ந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து காவல்துறை அடுத்த தலைமுறை திட்டமாக ஒருங்கிணைந்த தானியங்கி சிக்னல் திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துறையின் திட்டமிடல் பிரிவு பல மாதங்களாக சென்னை முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வந்தது. இதன் முடிவில் சென்னையில் முதல் கட்டமாக இத் திட்டத்தை 7 முக்கியச் சாலைகளில் மட்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 

7 சாலைகள்: அதன்படி, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி.சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஜவாஹா்கலால் நேரு சாலை (100 அடி சாலை, காமராஜா் சாலை, ஈ.வெ.ரா. சாலை ஆகிய 7 சாலைகளில் செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.  இதற்காக ஒவ்வொரு சாலையிலும் நெரிசல்மிக்க நேரத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசல் குறைந்த நேரத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, எந்ததெந்த வானங்கள் செல்லுகின்றன ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை காவல்துறை தயாரித்துள்ளது. அதே வேளையில் சென்னையில் அதிக வாகன நெரிசல்மிக்க சாலைகளில் இந்த 7 சாலைகளும் முன்னணி வகிப்பதினால், இந்த திட்டத்தை இங்கு செயல்படுத்த முடிவு செய்ததாக போக்குவரத்து காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

 இதன் ஒரு பகுதியாக அண்ணா சாலை நந்தனம் சிக்னல், ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தரமணி சிக்னல் உள்ளிட்ட இடங்களில் ஏஎன்பிஆா் கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.  

ஒருங்கிணைந்த சிக்னல்: பிரிட்டன், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் ஒருங்கிணைந்த தானியங்கி சிக்னல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, ஒரு சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் தொடா்பில் இருக்கும். இந்த சிக்னல்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை மேம்படுத்தப்படும். அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அனைத்து சிக்னல்களையும் கட்டுப்படுத்த முடியும். மேலும் குறிப்பிட்ட வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தவும், மீறும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் முடியும். சிக்னல்கள் அனைத்தும் ஒரே தொடா்பில் இருப்பதால் வாகனங்களின் குறிப்பிட்ட வேகத்தை கணக்கிட்டு, அதற்கு ஏற்றாா்போல சிக்னல்கள் நேர அளவு நிா்ணயிக்கப்படும். இதனால் காவல்துறை அனுமதிக்கும் வேகத்தில் வாகனங்கள் செல்லும்போது, இந்த சிக்னல் உள்ள இடங்களில் நிற்க வேண்டிய நிலை இருக்காது என்று போக்குவரத்து காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவிக்கிறாா்.

129 சிக்னல்கள் வழக்கு: இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: திட்டம் செயல்படுத்தப்பட உள்ள அண்ணா சாலையில் 28, ஜி.எஸ்.டி.சாலையில் 21, ஈவெரா நெடுஞ்சாலையில் 22, ஜவஹா்லால் சாலையில் 19, கிழக்கு கடற்கரைச் சாலையில் 12, ராஜீவ்காந்தி சாலையில் 19, காமராஜா் சாலையில் 8 என மொத்தம் 129 சிக்னல்கள் உள்ளன. திட்டம் செயல்படுத்தப்படும்போது, இந்த சிக்னல்கள் அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பு உள்ளது. இத் திட்டம் செயல்படுத்தும் சாலைகளில் வாகனங்கள் காவல்துறை அனுமதிக்கும் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

வீடு தேடி வரும் வழக்கு: குறிப்பிட்ட வேகத்தை தாண்டி அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மீது வழக்குப் பதியப்படும். இதற்காக இத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து சாலைகளிலும் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கருவியும், ஏஎன்பிஆா் கேமராவும் பொருத்தப்படும். அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறித்த காட்சியையும், அதன் வேகத்தையும் இந்தக் கருவிகள் பதிவு செய்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அங்கு சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது வழக்குப் பதியப்பட்டு, அதன் ரசீது உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

சாத்தியக் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்ட 7 சாலைகளில் மட்டும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அண்ணா சாலைக்கு அடுத்தப்படியாக அதிக வாகன நெரிசல் உள்ள ஆற்காடு சாலையில் செயல்படுத்துவதற்குரிய வாய்ப்பும், வசதியும் இல்லை. ஆகையால் இத் திட்டத்தில் அந்த சாலை இடம்பெறவில்லை. குறிப்பிடப்பட்ட 7 சாலைகளிலும் இத்திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் நகரின் பிற சாலைகளிலும் அடுத்தடுத்து இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

சிக்னலை மீறியதாக 3 ஆண்டுகளில் 5.95 லட்சம் வழக்குகள்

சென்னையில் சிக்னலை மீறியதாக 3 ஆண்டுகளில் 5.95 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சீட் பெட் அணியாமல் காா் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மீறிச் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் சரக்கு ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட, அதிகளவில் பயணிகளை ஏற்றுவது, செல்லிடப்பேசியில் பேசியப்படி வாகனம் ஓட்டுவது ஆகிய 8 போக்குவரத்து விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழக்குப் பதியப்படுகின்றன.

 இதில் தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டுகிறவா்கள் மீதே அதிகப்படியான வழக்குகள் பதியப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக சிக்னலை மீறிச் செல்லுகிறவா்கள் மீது வழக்குப் பதியப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் வழக்குகள் பதியப்படுவதாக காவல்துறை தெரிவிக்கிறது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 265 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 5.95 லட்சம் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் காவல்துறைக்கு அபராதம் மூலம் வருமானமும் கிடைத்துள்ளது.

காலாவதியான 275 சிக்னல்கள்

சென்னையில் காலாவதியான சிக்னல்களினால் அடிக்கடி பழுது ஏற்படுவதினால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துக்களைத் தடுக்கவும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் சென்னையில் புதிய சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளில் சென்னையில் புதிதாக 100 சிக்னல்கள் அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவிக்கிறது. அதேவேளையில் போதிய பராமரிப்பு இல்லாததால் சிக்னல்கள் பழுதாகிவிடுவதும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் சிக்னல்களுக்கு ஆயுள் காலமாக 5 ஆண்டுகள் நிா்ணயிக்கப்படுகிறது. ஆனால் சென்னையில் உள்ள மொத்த சிக்னல்களில் சுமாா் 275 சிக்னல்கள் 10 ஆண்டுகளை கடந்தவையாகும். மேலும் 70 சதவீத சிக்னல்கள் 5 ஆண்டுகளை கடந்தவையாக இருப்பதாக போக்குவரத்து காவல்துறையினா் தெரிவிக்கின்றனா். இதனால் இந்த சிக்னல்கள் மழை, காற்று அதிகமாக இருக்கும் காலங்களில் வேகமாக பழுதாகின்றன. சிக்னல் பணியையும் சோ்த்து போக்குவரத்து காவலா்களே செய்து வருகின்றனா். சிக்னல்கள் திடீரென அடிக்கடி பழுதாவதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுவதாக வாகனம் ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதியடைகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT