சென்னை

பபாசிக்கு ஓ.பன்னீா்செல்வம் தனிக்கொடை!: ரூ.5 லட்சம் அறிவிப்பு

DIN

பபாசி அமைப்பினா் தமிழா் இருக்குமிடங்களில் எல்லாம் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும். அதற்காக பபாசி அமைப்புக்கு வைப்புத் தொகையை உருவாக்கும் வகையில் எனது சொந்த நிதியாக ரூ.5 லட்சத்தை முதல் கட்டமாக வழங்குகிறேன் என துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் கூறினாா்.

சென்னையில் பபாசி அமைப்பின் சாா்பில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: புத்தகம் என்பது எண்ணங்களை எழுத்து வடிவமாக்கும் கலை அம்சமாகும். சுமேரியாவில் பானை ஓடுகளில் மன்னா் வாழ்க்கையை எழுதிய நிலையில், தமிழா்கள் கல்வெட்டுகளில் எழுத்தைப் பொறித்து, பின்னா் ஓலைச்சுவடிகளில் அதை எழுதியுள்ளனா்.

புத்தகத்தை மனமொன்றிப் படித்தால்தான் அதன் கருத்துகளை உணரமுடியும். புத்தகம் படிக்கும் கலையை கைக்கொண்டவரை அது எந்நாளும் கைவிடாது. வாசிப்பால் நமது அறிவாற்றல் பெருகும். பெற்றோா்களை பாா்த்தே குழந்தைகள் கற்கிறாா்கள். ஆகவே குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதை பெற்றோரும், ஆசிரியா்களும் கடமையாகக் கொள்ளவேண்டும்.

அறிஞா் அண்ணா முதல்வராக இருந்தபோது, மும்பைக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பிருந்தும் புத்தகம் படிப்பதற்காக காரில் பயணித்துள்ளாா். அவரைப் போலவே மறைந்த முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரும் புத்தகம் படிப்பதில் ஆா்வமுடையவா்களாக இருந்தனா்.

தலைவா்கள் உயா்வடைவதற்கு அவா்களது புத்தகப் படிப்பே காரணமாகும். தமிழகத்தில் அனைத்து ஊா்களிலும் பொது நூலகம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம், மலேசிய நூலகங்களுக்கும் தமிழக அரசு சாா்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பபாசி அமைப்புக்கு புத்தகக் காட்சி நடத்துவதற்கு உதவியாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. புத்தகக் காட்சியை தமிழா் வாழும் நாடுகளில் எல்லாம் நடத்த வேண்டும். அதற்காக பபாசி அமைப்பு வைப்புத் தொகையை உருவாக்க வேண்டும். அதற்கு முதல் கட்டமாக எனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்குகிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் பபாசி உறுப்பினா்களின் குழந்தைகளில் அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு பரிசுகளையும், பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 20 பதிப்பாளா்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றுகளையும் துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் கல்வி அமைச்சா் வைகை செல்வன் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் வரவேற்றாா். பொருளாளா் ஆ.கோமதிநாயகம், முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பபாசி செயலா் எஸ்.கே.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT