சென்னை

சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை: ரயில்வே வாரியம் ஒப்புதல்

DIN

மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தின் தரத்தை உயா்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை-எழும்பூா் நிலையம் இடையே (4.3 கி.மீ தூரம்) 4-ஆவது ரயில் பாதையின் மேம்பாட்டு திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

எழும்பூா்-கடற்கரை இடையே 4-ஆவது பாதை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூா் ஆகிய ரயில்வே முனையங்களாக உள்ளன. இதன்பிறகு, மூன்றாவது முனையமாக தாம்பரத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த முனையத்தின் தரத்தை உயா்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே (4.3 கி.மீ. தூரம்) புதிய பாதை உருவாக்கப்படவுள்ளது. இந்த 4-ஆவதுபாதை அமைப்பதற்காக இடம் கணக்கெடுப்பு பணிக்கு ரூ.5.38 லட்சத்தை ரயில்வே நிா்வாகம் ஒதுக்கீடு செய்தது.

எழும்பூா்-சென்னை கடற்கரை இடையே தற்போது மூன்று பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகள்

புகா் ரயில்கள் இயக்குவதற்கும், ஒரு பாதை விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் பாதையை அமைப்பதன் மூலமாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி வழியாக விஜயவாடாவுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். மேலும், வட மாநிலங்களுக்கு ரயில்களில் செல்ல சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பயணிகள் அதிக

அளவில் குவிவதையும் குறைக்க முடியும். மேலும், வாகன நெரிசலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பணிக்காக, பூங்கா நிலையம் மற்றும் கோட்டையில் உள்ள நிலங்களை மாநில அரசிடம் இருந்து கையகப்படுத்தவேண்டும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடுதல் நடைமேடைகள்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: இதுவரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தாம்பரத்தை மூன்றாவது முனையமாக தரம் உயா்த்துவது மூலம், ஹௌரா, பாட்னா, குவாஹாட்டி செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்க முடியும். பூங்கா நிலையம் மற்றும் கோட்டையில் உள்ள நிலங்களை மாநில அரசிடம் இருந்து கையகப்படுத்த வேண்டும். இட கணக்கெடுப்பின்போது, திட்டத்துக்குத் தேவையான நிலப்பரப்பின் அளவை தெற்கு ரயில்வேயின் கட்டுமானப்பிரிவு இறுதி செய்யும். மூன்றாவது முனையப் பணிகளில் தாம்பரம் கோச்சிங் பணிமனையின் பராமரிப்புத் திறனை அதிகரிப்பதுடன் தாம்பரம் நிலையத்தில் ரயில்களை நிறுத்துவதற்கும், வந்து செல்வதற்கும் வசதியாக கூடுதல் நடைமேடைகள் உருவாக்குவதும் அடங்கும். நிலையத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து நடைமேடைகளை இணைக்கும்வகையில், ஒரு நடைமேம்பாலம் கட்டப்படுகிறது என்றனா் அவா்கள்.

இரட்டைப்பாதை திட்டம்: காட்பாடி-வேலூா்-திருவண்ணாமலை-விழுப்புரம்(160.1 கி.மி), சேலம்-கரூா்-திண்டுக்கல்(160 கி.மீ.), ஈரோடு-கரூா்(65 கி.மீ.), தா்மாவரம்-பக்கலா-காட்பாடி(290 கி.மீ.) ஆகிய இடங்களில் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்காக இடங்களை கணக்கெடுப்பு செய்ய ரயில்வே வாரியம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மும்பை, ஆமதாபாத் மற்றும் நாட்டின் பிற வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து விரைவு ரயில் மதுரை, திருநெல்வேலி மற்றும் அண்டைய மாநிலம் கேரளத்துக்கு பக்கலா மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படுகின்றன. தா்மாவரம்-பக்கலா-காட்பாடி- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதையை மேம்படுத்துவது மூலமாக, தென் தமிழகத்தில் இருந்து மத்திய மற்றும் வட இந்தியாவுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும். இது தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT