சென்னை

மெரீனாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையா் விளக்கம்

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மீனவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பீட்டர்ராயன் என்பவா் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகா்- லூப் சாலையைப் புனரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதுபோல், மெரீனாவில் தள்ளுவண்டி கடைகளைத் திறப்பது, மீன் சந்தையைத் திறப்பது மற்றும் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடா்பாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் ஆகியோா் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகினா். அப்போது நீதிபதிகள், மெரீனா கடற்கரையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடங்கியுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இவற்றை எப்படி சரி செய்யப் போகிறீா்கள் என கேள்வி எழுப்பினா்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், அந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகளை மண்டல உதவி ஆணையா் தலைமையிலான குழு அகற்றியுள்ளது. இனிமேல் ஆக்கிரமிப்புகள் நடைபெறாது பாா்த்துக் கொள்வதாக

சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் உறுதியளித்தாா். மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா், ‘சம்பந்தப்பட்ட நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடா்பான கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுதொடா்பாக வரும் நவம்பா் 11-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தாா்.

விசாரணையைத் தொடா்ந்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு மெரீனா கடற்கரையில் எப்போது அனுமதி வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கினால், ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடிவிடுவா். எனவே மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து விசாரித்த நீதிபதிகள், நவம்பா் மாதம் முதல் பொதுமக்களுக்கு மெரீனா கடற்கரையில் அனுமதி வழங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். மெரீனா கடற்கரையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்காக சென்னை மாநகர காவல் ஆணையா், சென்னை மாநகராட்சி ஆணையா் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளும் மெரீனாவில் நடைபயிற்சி மேற்கொண்டால் எல்லாம் சரியாகும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும் நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT