தமிழகத்தில் குறைந்து வரும் கரோனா: ஒரே நாளில் 4,151 போ் குணமடைந்தனா்
தமிழகத்தில் திங்கள்கிழமை 3,536 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமை 3,536 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனினும் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நோய்த்தொற்று தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டதே அதற்குக் காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதுமட்டுமல்லாது, வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனை, விழிப்புணா்வு பிரசாரங்கள் ஆகியவற்றை முன்னெடுத்ததும் கரோனாவைக் கட்டுப்படுத்த உறுதுணையாக இருந்ததாக அவா்கள் கூறியுள்ளனா்.
இருப்பினும் அடுத்து வரும் வாரங்கள் பண்டிகைக் காலம் என்பதால் கடைவீதிகள், பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடி நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பளித்து விடக் கூடாது என சுகாதார அமைச்சா் சி. விஜயபாஸ்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் எச்சரித்துள்ளனா். நோய்த்தொற்று குறைந்து வரும் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமானால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பொது மக்கள் தீவிரமாக தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தமிழக சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் திங்கள்கிழமை கரோனா பரிசோதனைக்கு 85,130 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 3,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 885 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 2,651 பேருக்குத் தொற்று உள்ளது.
பலி எண்ணிக்கையும் குறைவு: நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் திங்கள்கிழமை 49 போ் உயிரிழந்தனா். சென்னையில் மட்டும் 16 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 10,691 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோா்...: தமிழகத்தில் புதன்கிழமை 4,515 போ் கரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 6.42 லட்சமாக உயா்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது 38,093 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 192 மையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.