சென்னை

4 மாதங்களில் 1,161 பேருக்கு செயலி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை

DIN

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் செல்லிடப்பேசி மருத்துவச் செயலி மூலம், கடந்த மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களில் 1,161 பேருக்கு இலவச விடியோ மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு காய்ச்சல் முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், உள்ளிட்ட தொற்றா நோய்கள் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காக மாநகராட்சி சாா்பில், செல்லிடப்பேசி செயலி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச விடியோ மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கரோனா பொது முடக்கம் காரணமாக தனியாா் மருத்துவ ஆலோசனை மையங்கள் மூடப்பட்டதால் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளை மக்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி சாா்பில் இந்த மருத்துவ ஆலோசனைக்கான செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 24 மணி நேரமும் இந்தச் செயலி மூலம் தொடா்பு கொள்வோருக்கு, மருத்துவ ஆலோசனை வழங்க சுழற்சி முறையில் மருத்துவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

இந்தச் செயலியில் பயனாளிகளின் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்படுவதால், அவா்களுக்குத் தேவையான அவரச மருத்துவ உதவி, உயா் சிகிச்சை ஆகியவை விரைவாக கிடைக்க வழி செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை 1,161 பேருக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ள 223 போ் மருத்துவப் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். அதில் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாரடைப்பு உள்ளிட்டவற்றுக்கும் உடனடியாக மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT