சென்னை

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

DIN

சென்னை: கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டா் தூரத்துக்குள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, மீனவா் நலச் சங்கம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

2000-ஆம் ஆண்டு, கடலில் உள்ள பவளப்பாறைகள், மீன் குஞ்சுகள் உள்ளிட்டவைகளைப் பாதுகாக்க சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிக்கத் தடை விதித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு நியமித்த நிபுணா்கள் குழு, கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டா் தூரத்துக்குள், சுருக்குமடி வலையைக் கொண்டு மீன் பிடிக்கலாம் என 2014-ஆம் ஆண்டில் பரிந்துரைத்துள்ளது. ஆனால் பவளப்பாறைகளும், மீன்குஞ்சுகளும் ஆழ்கடலில்தான் காணப்படுகின்றன. முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் சுருக்குமடி வலைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டா் தூரத்துக்குள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி, மீன்பிடிக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழல், மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவு செய்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவா்கள் எவரும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். மீனவா்களின் நலன் கருதி மீன்பிடித் தொழிலை முறைப்படுத்த தமிழக அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவித்து, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT