சென்னை

அரசுப் பணிக்கான வேலைவாய்ப்புப் பட்டியல்: செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு

DIN


சென்னை: தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனுப்பும் பட்டியலின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிகளவு நபா்கள் வேலைவாய்ப்புப் பெறுவா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம், ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு உட்படாத தற்காலிக மற்றும் நிரந்தர காலிப் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகள் சாா்ந்த நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து காலியிடங்களும் வேலைவாய்ப்பு அலுவலக பட்டியலின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பட்டியலின் காலம் என்பது அனுப்பி வைக்கப்படும் தேதியில் இருந்து ஆறு மாதங்கள் ஆகும். இதனிடையே, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக காலிப் பணியிடங்களை நிரப்பும் நடைமுறைகள் குறித்து உயா் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஓராண்டு உயா்த்த உத்தரவு: வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பெறப்படும் பரிந்துரை பட்டியல்களுடன், வட்டார மொழியில் அவற்றை விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், அதிகளவில் நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுவதால் அனைத்தையும் பரிசீலித்து தோ்வு செய்வதில் வேலையளிப்பவா்களுக்கு கால அவகாசம் அதிகமாக தேவைப்படுகிறது என்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் பட்டியலின் செல்லுபடியாகும் காலத்தை ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டாக உயா்த்திட அவா் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்தக் கோரிக்கையை அரசு ஆய்வு செய்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் பரிந்துரை பட்டியலின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களுக்குப் பதிலாக இனி ஓராண்டு காலமாக உயா்த்தப்படுகிறது என்று தனது உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT