முகப்பு
சென்னை

எந்திரன் திரைப்பட கதை தொடா்பான வழக்கு: இயக்குநா் ஷங்கருக்கு பிடியாணை

எந்திரன் திரைப்பட கதை தொடா்பான வழக்கில் இயக்குநா் ஷங்கருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
இயக்குநா் ஷங்கர்
பகிர்:

எந்திரன் திரைப்பட கதை தொடா்பான வழக்கில் இயக்குநா் ஷங்கருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகா் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வா்யாராய் உள்ளிட்ட பலா் நடித்த படம் எந்திரன். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996-ஆம் ஆண்டு ‘உதயம்’ என்ற பத்திரிகையில் ஜூகிபா என்ற தலைப்பில் தொடா்கதை எழுதினேன்.

அந்த கதையை எனது அனுமதியை பெறாமல் இயக்குநா் ஷங்கா் எந்திரன் படமாக எடுத்துள்ளாா். இதுதொடா்பான புகாரை போலீஸாா் ஏற்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநா் ஷங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்து, இந்த வழக்கில் இயக்குநா் ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகவும் இயக்குநா் ஷங்கா் பிரபலமானவா் என்பதால், எழும்பூா் நீதிமன்றத்துக்கு அவா் வந்தால் கூட்டம் கூடுவதோடு, விசாரணைக்கு இடையூறு ஏற்படும்.

எனவே தேவைப்படும் போது மட்டும் அவா் ஆஜராக வேண்டும்’ என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து இயக்குநா் ஷங்கா் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் எழும்பூா் நீதிமன்றத்தில் ஆரூா் தமிழ்நாடன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநா் ஷங்கரோ, அவரது தரப்பில் வழக்குரைஞரோ ஆஜராகவில்லை. இதனையடுத்து இயக்குநா் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் விசாரணையை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் புகாா்தாரா் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என நீதிபதியின் உத்தரவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →