ஓரே ஆண்டில் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்கம்! - மத்திய அரசு அறிவிப்பு!
2025 - 26 கல்வியாண்டில் மட்டும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது...
2025 - 2026 ஆம் கல்வியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2025 - 2026 கல்வியாண்டில் மட்டும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மாநிலங்களவையில், மத்திய சுகாதார இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டுள்ள பதிலில்,
“தேசிய மருத்துவ ஆணையம் அளித்த தகவலின்படி, ஒரே கல்வியாண்டில் 11,682 இளநிலை மருத்தவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களுக்கும், 8,967 முதுநிலைப் பட்டங்களுக்கான இடங்களுக்கும் (எயிம்ஸ் உள்பட) மத்திய அரசு அனுமதியளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களிடம் இருந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய மருத்துவ ஆணையம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, நாடு முழுவதும் கல்லூரி வசதி இல்லாத பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தின் மூலம், இதுவரை ரூ. 41,332 கோடி செலவில், 3 கட்டங்களாக 157 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.