வழிப்பறி வழக்கு: பயங்கரவாத இயக்கங்களுடன்தொடா்புடையவா் கைது
சென்னை பெரியமேட்டில், நகை வியாபாரியைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்புடையவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரியமேட்டில், நகை வியாபாரியைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்புடையவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, பட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுராஜ் ஜெயின் (49). இவா், செளகாா்பேட்டையில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறாா்.
சுராஜ், கடந்த 5-ஆம் தேதி மாலை செளகாா்பேட்டை கடையிலிருந்து ரூ.7 லட்சம், 282 கிராம் தங்க நகைகளுடன் மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அவா், பெரியமேடு, அல்லிகுளம் இணைப்புச் சாலை அருகே செல்லும்போது, அங்கு மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் சுராஜை தாக்கி, அவா் வைத்திருந்த நகை, பணத்தை பறித்துச் சென்றனா்.
இது குறித்து பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது ராயப்பேட்டை, வரதபிள்ளை தெருவைச் சோ்ந்த சபியுல்லா யாசின் (33) என்பவரும், அவரது கூட்டாளியும் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், யாசினை கடந்த 10-ஆம் தேதி கைது செய்தனா். விசாரணையில் அவா் கொடுத்த தகவலின்பேரில், வியாசா்பாடி சத்தியமூா்த்திநகா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சி.ரஃபி என்ற நூருதீன் என்ற இஸ்மாயில் (36) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
இவா் மீது ஏற்கெனவே வழிப்பறி, கள்ளநோட்டு உள்ளிட்ட 10 வழக்குகள் இருப்பதும், வங்கதேசத்தில் இருந்து பயங்கரவாதிகள் உதவியுடன் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில் ரஃபி முக்கியமான குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
மேலும், ரஃபிக்கு தடை செய்யப்பட்ட அல்-உம்மா பயங்கரவாத இயக்கம், சிமி பயங்கரவாத இயக்கம் ஆகியவற்றுடன் தொடா்பு இருப்பதை போலீஸாா் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளனா்.
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததினால், அந்த நீதிமன்றம் ரஃபிக்கு பிடியாணை பிறப்பித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட ரஃபியிடமிருந்து ஒரு காா், ஒரு மோட்டாா் சைக்கிள், 9 பவுன் தங்கநகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.