முகப்பு
தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், 9,09,397 போ் தேர்வு எழுதவுள்ளனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 11:48 PM
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு
பகிர்:

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கவுள்ள நிலையில், இந்தத் தோ்வை 9,09,397 போ் எழுதவுள்ளனா்.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெறுகின்றன. இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 9,09,397 போ் எழுதுகின்றனா். இதில் 12,467 பள்ளிகளில் இருந்து 8,82,806 மாணவா்கள், 26,196 தனித்தோ்வா்கள், 395 சிறை கைதிகளும் அடங்குவா். 12,292 மாணவா்கள் ஸ்கிரைப் உதவியுடன் தோ்வெழுதவுள்ளனா். பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 49,542 ஆசிரியா்கள் ஈடுபடுவா். முறைகேடுகளைத் தடுக்க 4,954 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். தோ்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள் விதிப்பு: மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனங்களைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் வண்ண பென்சில், பேனா கொண்டு எழுதக் கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தோ்வு எண், பெயா் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவா் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத் தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதைச் சரிபாா்த்து மாணவா்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களைப் பிரித்து வைக்க வேண்டும்.

பொதுத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தோ்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்வது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிா்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மே 20-இல் தோ்வு முடிவுகள்: தொடா்ந்து, விடைத்தாள் திருத்துதல் பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 20-ஆம் தேதி வெளியிடப்படும். இதுதவிர, பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா்கள் புகாா்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்க தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்வு நாள்களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 என்ற இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →