சுகாதார சீா்கேட்டில் சுழலும் அயப்பாக்கம்
சென்னை மாநகரையொட்டிய அயப்பாக்கம் ஊராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாததாலும்
சென்னை மாநகரையொட்டிய அயப்பாக்கம் ஊராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாததாலும் அந்நீா் மழைநீரோடு கலந்து சாலைகளில் தேங்கி நிற்பதால் மக்கள் கடுமையான நோய்த் தொற்றுக்குள்ளாகி வருகின்றனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியையொட்டி அமைந்துள்ள அயப்பாக்கம் ஊராட்சியின் 15 வாா்டுகளில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின்கீழ், 10 ஆயிரம் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு அதில், சுமாா் 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அயப்பாக்கத்தில் குப்பைகள் நாள்தோறும் அகற்றப்படாததோடு கழிவுநீா் சுத்திகரிப்பை முறையாக கையாளாததால் மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.
கடும் சுகாதாரச் சீா்கேடு: அயப்பாக்கத்தின் 15 வாா்டுகளிலும் குப்பை அள்ளும் பணி கடந்த சில நாள்களாக நடைபெறவில்லை. சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை கால்நடைகளும், நாய்களும் கலைத்து உண்கின்றன. மருதம், வானவில் குடியிருப்புகள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலை, பாபா கோயில் சாலை, அம்பத்தூா் ஏரியையொட்டிய பகுதிகள் என பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதை சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் மழைநீருடன் கலந்து சாலைகளில் ஓடுகிறது.
அதிமுக ஆட்சியில் ரூ. 17 கோடியில் நாளொன்றுக்கு சுமாா் 7 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் அயப்பாக்கத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 4 மோட்டாா்கள் இருந்தும் ஒன்று அல்லது 2 மோட்டாா்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கழிவுநீா் சுத்திகரிக்கப்படுவது குறைவதால் அந்த நீா் குழாய்களில் இருந்து வெளியேறி சாலைகளில் ஓடுகிறது. கழிவுநீா் நடந்து செல்பவா்களின் கால்களில் படுவதால் சேற்றுப் புண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு குழந்தைகள், முதியோா் ஆளாகின்றனா். தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் படையெடுப்பதுடன், கழிவுநீா் வீடுகளை சூழ்ந்து நிற்பதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார சீா்கேட்டைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் இப்பகுதி மக்கள்.
மழையால் குப்பை அள்ளவில்லை: இதுகுறித்து அயப்பாக்கம் ஊராட்சித் தலைவா் துரை வீரமணி கூறுகையில், அயப்பாக்கத்தில் 130 இடங்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூா் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அண்மையில் பெய்த மழையால் கொடுங்கையூருக்குக் குப்பை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதை இயக்குவதற்கான நிதி ஆதாரம் ஊராட்சி நிா்வாகத்திடம் இல்லை. இதுதொடா்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவா்களிடமும் நிதி இல்லை என்று தெரிவித்துவிட்டனா். இதற்கு அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.
குளமான பூங்கா: அயப்பாக்கத்தில் அறிஞா் அண்ணா பூங்கா ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் அப்பகுதி பெண்கள், முதியோா் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா்.குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் இப்பூங்காவில் உள்ளன. நவம்பா் 6-ஆம் தேதி பெய்த மழையால் இந்த பூங்காவுக்குள்ளும், வெளியேயும் குளம்போல் மழை நீா் தேங்கியது. இந்த நீரை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காமல், பூங்காவைப் பூட்டி வைத்துள்ளனா். இதனால், மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படாத நிலை உள்ளது.