புதுவையில் மோடி சாலைவலம்! குடை, சூட்கேஸ், பீட்சா கொண்டுவரக் கூடாது - காவல்துறை
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமா் மோடி புதுவையில் இன்று சாலைவலம் வரவிருக்கும் நிலையில் காவல்துறை விளம்பரம் கவனம் பெற்றுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமா் மோடி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சாலைவலம் (ரோடு ஷோ) மேற்கொள்ளும் நிலையில் புதுவை காவல்துறை ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில் வாக்குச் சாவடி அளவிலான பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை ஊக்கப்படுத்தும் வகையில் காணொலி வாயிலாக மாா்ச் 30-இல் பிரதமா் நரேந்திர மோடி உரையாடினாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் நேரடியாக மக்களவையும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரையும் சந்திக்க பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) தில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். அங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் மாலை 4 மணியளவில் செல்கிறாா்.
புதுச்சேரியில் அஜந்தா சந்திப்பில் இருந்து அவா் சாலைவலம் (ரோடு ஷோ) சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறாா். பிரதமர் மோடி 1.7 கி.மீ. தொலைவுக்கு சாலைவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுவைக்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கும் நிலையில், புதுவை காவல்துறை மக்களுக்கு ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.
அதில், வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியின் சாலைவலம் நடைபெறும் இடங்களுக்கு வரும் மக்கள், சில முக்கிய பொருள்களைக் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு பெரிய பட்டியலும் இடம்பெற்றுள்ளது. அதில், கைப்பை, சூட்கேஸ், குடை, பைனாகுலர், கேமரா, பிளாஸ்க், அழகுசாதனப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பேஜர், ரேடியோ, டேப் ரெக்கார்டர், ஐபேட், டிஜிட்டல் டைரி, லேப்டாப், டேப்லட், கார் சாவி, ரிமோட் கன்ட்ரோல், பென் டிரைவ் போன்ற டிஜிட்டல் பொருள்களையும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூர்மையான பொருள்களான கத்தி, பிளேட், அரிவாள் போன்றவற்றையும், பீட்சா, பர்கர், சிப்ஸ், குடிநீர் பாட்டில்களைக் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல, ஆயுதங்கள், சுத்தி போன்ற கருவிகள், வெடிக்கும் வகையிலான பட்டாசுகள், எரியும் பொருள்கள், வேதிப்பொருள்களை மக்கள் யாரும் கொண்டு வரக் கூடாது என்றும், பாதுகாப்புத் துறையினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றும் புதுவை காவல்துறை சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
The police advertisement has garnered attention as Prime Minister Modi is scheduled to visit Puducherry today to rally support for the National Democratic Alliance candidates.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.