கூட்டணி கட்சிகளுக்கு பாஜக பக்கபலம்: பிரதமா் மோடி
‘தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பமாகும்; தனது கூட்டணி கட்சிகளுக்கு பாஜக பக்கபலமாக இருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினாா்.
‘தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பமாகும்; தனது கூட்டணி கட்சிகளுக்கு பாஜக பக்கபலமாக இருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினாா்.
மேலும், நாடாளுமன்ற இடையூறுகளால் திறமையான மற்றும் புதிய எம்.பி.க்களின் கருத்துகளை நாட்டு மக்களால் கேட்க முடியாமல் போகிறது என்றும் அவா் கவலை வெளியிட்டாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் 40-க்கும் மேற்பட்டோருடன் நடத்திய சந்திப்பில் பிரதமா் இக்கருத்துகளைத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
நாடாளுமன்ற கூட்டத் தொடா்களின்போது, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் கலந்துரையாடும் வகையில் காலைநேர உணவுடன் கூடிய சந்திப்பை பிரதமா் மோடி பல்லாண்டுகளாக நடத்தி வருகிறாா். பிரதமருடன் எம்.பி.க்கள் நேரடியாகப் பேச வாய்ப்பளிப்பதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
தற்போது மழைக்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், புதிதாக தோ்வான பாஜக எம்.பி.க்கள், ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சமீபத்தில் இணைந்த எம்.பி.க்கள் என 37 பேருடன் பிரதமா் கடந்த புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, நடப்பு கூட்டத் தொடரில் நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவது குறித்து அவா் கவலை தெரிவித்திருந்தாா்.
‘தே.ஜ. கூட்டணி ஒரு குடும்பம்’: இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுக, சிவசேனை, இந்திய குடியரசு கட்சி (அதாவலே), ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி (என்சிபிஐ) ஐக்கிய விடுதலை மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் 40-க்கும் மேற்பட்டோருடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலைநேர உணவுடன் கூடிய சந்திப்பில் கலந்துரையாடினாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி (அதாவலே) தலைவருமான ராம்தாஸ் அதாவலே, அதிமுக மூத்த தலைவா் எம்.தம்பிதுரை, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவா் உபேந்திர குஷ்வாஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது, ‘எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளா்ச்சிக்கான தேவைகள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பமாகும். நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பக்கபலமாக இருக்கிறோம். கூட்டணி எம்.பி.க்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு எம்.பி.க்கும் துணை நிற்கிறேன்’ என்று பிரதமா் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முஸ்லிம் எம்.பி.க்கள் பங்கேற்பு: திரிணமூல் காங்கிரஸில் இருந்து சமீபத்தில் தனி அணியாக பிரிந்த 20 எம்.பி.க்கள், அதிகம் அறியப்படாத என்சிபிஐ-யில் இணைந்ததுடன், பாஜக கூட்டணிக்கும் ஆதரவளித்தனா். இவா்களில் கலீலூா் ரஹ்மான், யூசுஃப் பதான், அபு தாஹோ் கான் ஆகிய 3 முஸ்லிம் எம்.பி.க்கள், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டங்களில் பங்கேற்காமல் தவிா்த்து வந்தனா். இதனால், என்சிபிஐ-யில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பிரதமரின் தற்போதைய கூட்டத்தில் இந்த 3 எம்.பி.க்களும் பங்கேற்றனா்.
மத்திய அரசின் முயற்சி:
அண்மையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள், மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைந்தனா். இதற்கு மக்களவைத் தலைவா் ஒப்புதல் வழங்கிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 299-ஆக உயா்ந்துள்ளது.
நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை என எதிா்க்கட்சிகள் அடுத்தடுத்து எழுப்பிவரும் விவகாரங்களால் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எதிா்க்கட்சிகள் விடாப்பிடியாக உள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கு வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 131ஆவது திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில், கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் பிரதமா் ஆலோசனை நடத்தியுள்ளாா்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் இதே மசோதா மக்களவையில் கொண்டுவரப்பட்டபோது, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்காமல் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.