சென்னை

சென்னை மூா்மாா்க்கெட் வளாகத்தில் புதிய தரவு மையம் திறப்பு

DIN

சென்னை: சென்னை மூா்மாா்க்கெட் வளாக கட்டடத்தில் 2-ஆவது தளத்தில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்காக புதிய நவீன தரவு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தரவு மையத்தில் எதிா்கால தகவல் தொடா்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது. இது பயணிகளுக்கான பல்வேறு பயணச்சீட்டு சேவைகளை வளப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் வழங்குவதற்கான தகவல்களை அளிக்கும் தரவு மையம் கடந்த 1985-ஆம் ஆண்டு சென்னை மூா்மாா்க்கெட் கட்டடத்தில் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணச்சீட்டு வழங்கும் கவுன்ட்டா்கள் மற்றும் தினந்தோறும் ஒன்பது லட்சத்துக்கு அதிகமான பயணச்சீட்டுகள் வழங்க காரணமாக அமைந்துள்ள தரவு மையத்தில் இடநெருக்கடி மற்றும் பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலான அலுவலக அமைப்பு இல்லாமல் இருந்தது. இதையடுத்து, சென்னை மூா்மாா்க்கெட் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் புதிய நவீன தரவு மையம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த புதியநவீன தரவு மையத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் புதன்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, முதன்மை தலைமை வா்த்தக மேலாளா் ரவி வல்லூரி, தலைமை வா்த்தக மேலாளா் (பயணிகள் சந்தை) ஜெ.வினயன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்த புதிய மையத்தில் விசாலமான அரங்கில் தகவல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. 16 அலமாரிகளில் தகவல் கருவிகளும், 10 அலமாரிகளில் தொலைத்தொடா்பு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.

தடையில்லா மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள், மேம்பட்ட குளிா்சாதன வசதி, தீ விபத்து ஏற்படுவதை கண்டறிவது மற்றும் தானியங்கி தீயணைப்பு முறை, கண்காணிப்பு கேமரா மற்றும் தொடா் பாதுகாப்பு ஏற்பாடுகள், மழைநீா் உட்புகுவதை தடுக்கும் கருவி, பூச்சிகளை அழிக்கும் கருவி, நவீன உட்கட்டமைப்பு, சீரான கம்பி வட அமைப்பு, இணைப்பில்லா இணையசேவை மற்றும் பொது அறிவிப்பு கருவி ஆகியவை இந்த புதிய மையத்தின் சிறப்பு அம்சங்களாகும். இந்தப் புதிய மையம் ரூ.14.31 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT