சென்னை

எழும்பூர் உள்பட 5 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் 

DIN

சென்னை: தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேசுவரம் , கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள்  ரூ.1,000 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் முக்கிய ரயில்நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில்நிலையம் உள்ளது. 114 ஆண்டுகள் பழமையான, அழகான கட்டமைப்புகளை கொண்ட நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. இந்த நிலையம் மறு மேம்பாட்டு பணிக்கு முன்மொழியப்பட்டது. அதன்படி, சுமார் ரூ.450 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் உலக தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்தப்படவுள்ளது. 
இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை இரவு பார்வையிட்டார். ரயில்நிலையத்தின் நடைமேடைகள், பயணிகள் அமரும் பகுதிகள் , நடைமேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். மேலும் ,பயணிகளிடம் அடிப்படை வசதிகள் தொடர்பாக கேட்டறிந்தார். 
 பின்னர், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது: 
பிரதமர் மோடிக்கு இந்திய ரயில்வே பற்றி ஓர் பார்வை உள்ளது. இந்திய ரயில்வேயின் வளர்ச்சி மூலமாக, இந்திய பொருளாதாரம் மேம்படும் என்று நம்புகிறார். 
எனவே, நாட்டில் பல்வேறு ரயில்நிலையங்கள் மேம்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.  பெரிய ரயில் நிலையங்கள், நடுத்தர ரயில்நிலையங்கள் ஆகியவை மறு மேம்பாடு செய்யப்படவுள்ளன. முதல்கட்டமாக, காந்திநகர் ரயில்நிலையம், மத்தியப் பிரதேசத்தில் கமலாபதி ரயில்நிலையம் ஆகிய இரண்டு நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பல ரயில்  நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படவுள்ளன. 
 தமிழகத்தில் முதல்கட்டமாக,  சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில்நிலையங்கள் ரூ.1,000 கோடி முதலீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன.   
சென்னை எழும்பூர் ரயில்நிலையம் பாரம்பரிய மிக்க ரயில் நிலையம் ஆகும். இது பொருளாதார செயல்பாட்டுக்கு முக்கிய மையமாக உள்ளது. இங்கு அனைத்து வசதிகள் பயணிகளுக்கு செய்துகொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT