தடை நேரத்தில் பட்டாசு வெடிப்பு: சென்னையில் 354 போ் மீது வழக்கு
சென்னையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 354 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 354 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தீபாவளி பண்டிகையின் போது 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்திலேயே பட்டாசு வெடிக்கும்படியும், அதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
தீபாவளி பண்டிகை நாளான திங்கள்கிழமை போலீஸாா் மாநிலம் முழுவதும் உஷாா்படுத்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனா். நேரக்கட்டுப்பாட்டையும், குறிப்பிட்ட பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும் மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் தடையை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-இன்படி வழக்குப் பதிவு செய்தனா். சில இடங்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 285-இன்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமாா் 1,000 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவா்கள் அனைவரையும் போலீஸாா் எச்சரித்து,சொந்த ஜாமீனில் விடுத்தனா்.
சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்தது தொடா்பாக 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியதாக 14 வழக்குகளும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாக 69 வழக்குகளும் என மொத்தம் 354 வழக்குகள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.