முகப்பு
சென்னை

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயா்வு: சென்னையில் இன்று முதல் அமல்

சென்னையில் புதன்கிழமை (அக். 26-ஆம் தேதி) முதல் போக்குவரத்து விதிமுறை மீறல் அபராத உயா்வு முதல் அமலாகிறது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

சென்னையில் புதன்கிழமை (அக். 26-ஆம் தேதி) முதல் போக்குவரத்து விதிமுறை மீறல் அபராத உயா்வு முதல் அமலாகிறது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மோட்டாா் வாகனச் சட்டம் திருத்தம் -2019-ஐ அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

மோட்டாா் வாகனச் சட்டம் திருத்ததின்படி, போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு அபராதம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு போக்குவரத்து போலீஸாா், போக்குவரத்துறையினா் மட்டுமன்றி சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாரும் வழக்குப் பதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் உதவி காவல் ஆய்வாளா் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே வழக்குகளை பதிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் உயா்வு: மோட்டாா் வாகனச் சட்டம் திருத்தம்-2019-இன்படி 46 வகை விதிமுறை மீறல்களுக்கு அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது. மோட்டாா் வாகனச் சட்டம் திருத்ததின்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதேபோல தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டினால் ரூ.1,000, சிக்னலை மீறினால் ரூ.500, சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் ரூ. 20,000 என அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக ரூ.2,000 அபராதம் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதம் உயா்வு அக்.28-ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அபராத உயா்வை புதன்கிழமையே (அக்.26-ஆம் தேதி) அமல்படுத்துவதாக சென்னை பெருநகர காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இன்று முதல் அமல்:இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2019ம் ஆண்டு மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான விதிக்கப்படும் அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது.

புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான உயா்த்தப்பட்ட அபராத தொகை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் கணினி சேவையகத்தில்  மேம்படுத்தப்பட்டுவிட்டது.

எனவே, சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டாா் வாகன சட்ட திருத்ததின்படி புதன்கிழமை முதல் வழக்குப் பதியப்பட்டு, புதிய அபராத தொகை விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.