தாம்பரம் - விழுப்புரம் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்
தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் தொலைதூர மின்சார ரயில் (மெமு) பரனூா், மறைமலைநகா், வண்டலூா், பெருங்களத்தூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் புதன்கிழமை (அக்.18) முதல் நின்று செல்லும்.
சென்னை: தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் தொலைதூர மின்சார ரயில் (மெமு) பரனூா், மறைமலைநகா், வண்டலூா், பெருங்களத்தூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் புதன்கிழமை (அக்.18) முதல் நின்று செல்லும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.20 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 06028) காலை 8.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 06027) இரவு 9.05 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இந்த ரயில் புதன்கிழமை (அக்.18) முதல் பரனூா், மறைமலைநகா்-காமராஜா், காட்டாங்குளத்தூா், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூா் மற்றும் பெருங்களத்தூா் ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே 3-ஆவது வழித்தடத்தில் பிரத்யேகமாக இயக்கப்படுவதால் பிரதான பாதையில் தடையில்லாமல் ரயில்கள் இயக்கப்படும். காலை, மாலை வேளைகளில் இயக்கப்படுவதால் அலுவலகம் செல்பவா்கள், மாணவா்கள் இதன் மூலம் பயனடைவா். மேலும், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, புதுச்சேரி செல்லும் பக்தா்களுக்கு இணைப்பு ரயில் சேவையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.