திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!
தில்லியில் திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்ட அறிவிப்பு பற்றி...
பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் திருநங்கைகளையும் இணைத்து தில்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் அதே வழிமுறையில் தற்போது திருநங்கைகள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தத் திட்டம் சமூக ஒருங்கிணைவு, கண்ணியம், சம உரிமை ஆகியவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசின் முயற்சியை பிரதிபலிக்கிறது. இதன்மூலம், திருநங்கைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் நகரத்தின் எந்த மூலைக்கும் நிதித் தடைகள் இல்லாமல் சென்று வரமுடியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தில்லி முதல்வர் ரேகா குப்தா இதுபற்றிப் பேசுகையில், “நமது அரசு, ஒவ்வொரு குடிமக்களும் மரியாதையுடன் தங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சேவைகளை அணுகக்கூடிய விதத்தில், அனைவரையும் உள்ளடக்கிய, சமமான தில்லியை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ’பிங்க் சஹேலி’ எனப்படும் அட்டையை இம்மாதத் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லியில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதன்மூலம், தில்லியில் பெண்கள் இலவசப் பேருந்து பயணம் மேற்கொள்ளவும், மெட்ரோ போன்ற சேவைகளைக் கட்டணம் மூலம் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ’பிங்க் சஹேலி’ அட்டை வாங்கும் வரை அடுத்த 3 மாதங்களுக்குப் பெண்கள் பிங்க் டிக்கெட் மூலம் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
Delhi govt approves free bus travel for transgender passengers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.