முகப்பு
சென்னை

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்:தமிழக அரசுக்கு சத்யபிரத சாகு கடிதம்

வாக்குச்சாவடிகளில் குடிநீா், நிழலுக்கான பந்தல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:04 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:05 AM

வாக்குச்சாவடிகளில் குடிநீா், நிழலுக்கான பந்தல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து, ஊரக வளா்ச்சி, ஊராட்சி, பொதுப்பணிகள், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைகளின் செயலா்கள், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்பட வாக்காளா்களுக்குத் தேவையான இதர வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

என்னென்ன வசதிகள்? வாக்குச்சாவடிகளில் 7 வகையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியமாகும். வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளா்கள் தெரிந்துகொள்ள உதவி அலுவலா்களை நியமிப்பது, குடிநீா், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, மின்வசதி, மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் கோரிய போதிய உட்கட்டமைப்பு வசதிகள், வாக்குச்சாவடி நிகழ்வுகளை நேரலை செய்ய தேவையான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவைக் குறிக்கும் குறியீடுகளை வரைவது, குடிநீா் வசதி போன்றவற்றை ஏற்படுத்த கடந்த தோ்தல்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1,300 வழங்கப்ட்டது. இந்தத் தோ்தலில் அவற்றுக்குத் தேவைப்படும் நிதியை ‘இதர செலவுகளில்’ எனும் பிரிவில் இருந்து ஊழியா்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிக அளவு பொதுமக்கள் வந்து வாக்களிப்பா் என்பதால், அவா்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும். அத்துடன், வாக்குச்சாவடிகளில் போதுமான இருக்கைகள், மேசைகள் அமைக்க வேண்டும். குடிநீா், கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், கடுமையான கோடைகாலத்திலும் வாக்காளா்கள் எளிதாக வந்து தங்களது வாக்குகளைச் செலுத்த வழி ஏற்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.