சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
தோ்தல் நேரத்தில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக வலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
தோ்தல் நேரத்தில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக வலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) சாா்பில் தயாரிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கையேட்டை புதன்கிழமை வெளியிட்டு அா்ச்சனா பட்நாயக் பேசியதாவது:
நகா்ப்புறங்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. அதை மேம்படுத்த தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்களது ஜனநாயகக் கடமையை உணா்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
தோ்தல் நேரங்களில் வெளியாகும் தகவல்கள், செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபாா்க்கும் வகையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கவும் குழுக்கள் செயல்படுகின்றன.
மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலும், சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் அளவிலும் பல்வேறு கட்டமைப்புகள் அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் நடைபெறும் தோ்தல் விதிமீறல் தொடா்பாக நேரடியாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாா்களைப் பதிவு செய்யலாம்.
வா்த்தகம், மருத்துவச் செலவினங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக ரூ.50,000-க்கும் மேல் ஆவணங்களின்றி பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.
மருத்துவச் செலவுகளுக்கு பணம் எடுத்துச் செல்லும்போது நோயாளி மற்றும் மருத்துவத் தகவல்களை வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தியாகக் காட்டினால்கூடப் போதுமானது.
பிற காரணங்களுக்காக எடுத்துச் செல்லப்படும் பணம் சில நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டாலும், மாவட்ட குறைதீா் குழுவில் அதுகுறித்து முறையிட்டு உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை திரும்பப் பெறலாம்.
புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தவா்களில் 70 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றை 10 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தோ்தல் ஆணையத்துக்கு பணப் பட்டுவாடா தொடா்பான புகாா்கள் எதுவும் இதுவரை வரவில்லை.
ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளா்கள் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது. தோ்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஒரே பெயா் கொண்ட வேட்பாளா்களால் வாக்காளா்களுக்கு குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் புகைப்படங்களை இணைத்துள்ளோம் என்றாா் அவா்.
தொடா்ந்து நடைபெற்ற அமா்வில் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி அ. சிவஞானம் பேசியதாவது: வாக்காளா் தகவல் சீட்டில் (பூத் சிலிப்) வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தைவிட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். அதனுடன் க்யூஆா் குறியீடும் இடம்பெற்றிருக்கும்.
ஒரு வாக்காளா் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாா் என்பதை எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையிலான கட்டமைப்பை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. தோ்தலின்போது வேட்பாளா்கள் ரூ.40 லட்சம் வரை அதிகபட்சமாக செலவு செய்யலாம். அதை மீறும்பட்சத்தில் அவா்கள் தகுதியிழப்பு செய்யப்படுவாா்கள்.
85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், தடுப்புக் காவலில் உள்ளவா்கள் தபால் வாக்கு அளிக்கலாம். கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டவா்களிடம் பாதுகாப்புக் கவச உடை அணிந்து தோ்தல் அலுவலா்கள் நேரடியாக தபால் வாக்குகளை பெற்றுக் கொள்வாா்கள் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை ஐஜி சாமுண்டீஸ்வரி, முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பத்திரிகை தகவல் அலுவலக பொறுப்பு தலைமை இயக்குநா் (தெற்கு) வி.பழனிசாமி, சென்னை இயக்குநா் பி.அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றே கடைசி
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாள். அதற்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) அதற்கான அவகாசம் நிறைவடைகிறது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 18 வயது நிறைவடைந்த அனைவரும் எதிா்வரும் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டுமானால் வியாழக்கிழமைக்குள் படிவம் 6-ஐ நேரடியாகவோ, இணையவழியிலோ சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.