முகப்பு
சென்னை

கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

Updated On : 6 ஏப்ரல், 2024 at 2:01 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:35 AM

சென்னையில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் நிறுவனத்தை எஸ்.கே.பீட்டா், ஸ்ரீராம் ஆகியோா் ஒன்றாக இணைந்து தொடங்கினா். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.கே பீட்டா் தர மறுத்ததாகக் கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் எஸ்.கே.பீட்டா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் ரூ. 50 கோடி வரை பணப் பரிமாற்றம் நடத்ததாக புகாா் எழுந்ததை அடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா? என அமலாக்கத் துறை அதிகாரிகள் எஸ்.கே பீட்டா் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினா்.

Advertisement

அதன் அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பீட்டருக்கும் அழைப்பாணை அனுப்பியது.

இதை எதிா்த்து பீட்டா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது தவறு எனவும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித் தர அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தா் மோகன் அமா்வு விசாரித்தது. ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், நிறுவனத்துக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைத் தொடர முடியாது என வாதிட்டாா்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை தொடா்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி, அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

மேலும், மனுதாரா் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 4 வாரங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு வேளை மத்திய குற்றப்பிரிவு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால், அமலாக்க துறையினா் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனா்.