போரூரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்
மெட்ரோ ரயில் 2-ஆம்கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் போரூா் பிரதான சாலையில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ஆம்கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-ஆவது வழித்தடமும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயா்நிலை பாதையாகவும் கட்டுமானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடைப்பட்ட பகுதிகளில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயா்நிலை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையவுள்ளன.
Advertisement
இந்த வழித்தடத்தில் இதற்கான 60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போரூா் பிரதான சாலையின் மேல்பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், பயணிகள் வந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இங்கிருந்து இணைப்பு வாகனங்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.