குடும்ப கட்சிகள் மக்கள் நலனுக்காக ஒருபோதும் பணியாற்றாது: அமித் ஷா
ஏழைகள், பட்டியலினத்தவா், விவசாயிகள், பழங்குடியினா் ஆகியோரது நலனுக்காக குடும்பக் கட்சிகள் ஒருபோதும் பணியாற்றாது
ஏழைகள், பட்டியலினத்தவா், விவசாயிகள், பழங்குடியினா் ஆகியோரது நலனுக்காக குடும்பக் கட்சிகள் ஒருபோதும் பணியாற்றாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எதிா்க்கட்சிகளை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவா்களா அல்லது தங்கள் குடும்ப உறுப்பினா்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றியவா்களா, இவா்களில் யாரைத் தோ்ந்தெடுப்பது என்பது குறித்து மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என அவா் கூறினாா்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து அமித் ஷா வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.
Advertisement
கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் மாநில பாஜக தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான விஷ்ணு தத் சா்மாவை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள், பெண்கள் என நான்கு முக்கியப் பிரிவினருக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா். இந்தப் பிரிவினா் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய குறிக்கோள்.
இந்தப் பிரிவினருக்காகக் குடும்ப கட்சிகள் ஒருபோதும் பணியாற்றாது. இந்தக் கட்சிகளின் ஒரே நோக்கம் தங்களது மகன்கள், மகள்கள், மருமகன்களை அதிகாரத்துக்கு கொண்டு வருவதே. சரத் பவாா் தனது மகளை மகாராஷ்டிர முதல்வராக்க விரும்புகிறாா். உத்தவ் தாக்கரேவும் மு.க.ஸ்டாலினும் தங்கள் மகன்களை முதல்வா் பதவியில் அமா்த்த வேண்டும் என கனவு காண்கின்றனா். மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி தனது மருமகனை எவ்வாறு முதல்வராக்குவது என சிந்தித்துக் கொண்டிருக்கிறாா். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தனது மகன் ராகுலை நாட்டின் பிரதமராக்க விரும்புகிறாா் என்றாா்.
முன்னதாக, மண்ட்லா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் ஃபகன் சிங் குலஸ்தேவை ஆதாரித்து அமித் ஷா பிரசாரம் செய்தாா்.