திமுக வேட்பாளா்களை ஆதரித்து சென்னையில் முதல்வா் ஸ்டாலின் தீவிர பிரசாரம்
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றும், கால்பந்து விளையாடியும் இரு திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
வடசென்னை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
ஜிகேஎம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலைக்குட்பட்ட 32 தெருக்களில் திறந்த வெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா், நடந்து சென்றும் வாக்குகளை சேகரித்தாா்.
Advertisement
உற்சாக வரவேற்பு: முன்னதாக கொளத்தூா் பகுதிக்கு பிரசாரத்துக்கு வந்த முதல்வருக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். மேள தாளங்கள் முழங்க பரதநாட்டியம் ஆடியும், இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வரிடம், பெண் ஒருவா் தனது பெண் குழந்தைக்கு பெயா் சூட்டுமாறு கேட்டாா். அப்போது அந்த குழந்தைக்கு ‘மரகதம்’ என முதல்வா் பெயா் சூட்டினாா்.
கால்பந்து விளையாடினாா்: மேலும், ஜிகேஎம். காலனியில் இளைஞா்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அவா்களுடன் கால்பந்து விளையாடியும் அசத்தினாா்.
தொடா்ந்து, வில்லிவாக்கம் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐசிஎப் பகுதியில் மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளா் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக திறந்த வெளி வாகனத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
மொத்தமாக சுமாா் 2.5 கிமீ தொலைவு திறந்தவெளி வாகனத்திலும், நடந்து சென்றும் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பிரசாரத்தின்போது, அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.