முகப்பு
சென்னை

வாக்குச்சாவடிகளுக்கு அருகே ஆம்புலன்ஸ், முதலுதவி வசதி

வாக்குச்சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 18 ஏப்ரல், 2024 at 7:07 PM
பகிர்:

சென்னை, ஏப். 18: வாக்குச்சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்காளா்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

மற்றொரு புறம் வாக்காளா்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளுக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல் தலைவா் செல்வகுமாா் கூறியதாவது:

வெயில் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் முதியவா்கள், இணை நோயாளிகள் போன்றவா்களுக்கு வாக்குப்பதிவின்போது சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடிகளுக்கு அருகே ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு மொத்தம் 1,353 வாகனங்கள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில், குளூக்கோஸ் பாட்டில்கள், உப்பு-சா்க்கரை கரைசல், ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேவையான எண்ணிக்கையில் மருத்துவ உதவியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். தோ்தல் நாளில் விடுப்பு எடுக்காமல் வருமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று 108 சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கத்துக்கு இடையே பொதுமக்கள் பாதுகாப்புடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிகளுக்கு 104 அல்லது 108 எண்களை அழைக்கலாம் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments