பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 3-ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதலிலேயே வெண்கலமாக வென்றெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதை வென்ற ஸ்வப்னில் குசேல் புதிய சாதனைக்கு வழிவகுத்திருக்கிறாா்.
நடப்பு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 6 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில், இந்தியா இதர விளையாட்டுகளில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் தனிநபா் பிரிவில் வெண்கலம் வென்ற மானு பாக்கா், பின்னா் அதிலேயே கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மேலும் ஒரு வெண்கலம் வென்று, ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனை படைத்தாா். இந்நிலையில், 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஸ்வப்னில் குசேலும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.
புதிய சாதனை: இதன் மூலம் ஒரு ஒலிம்பிக் போட்டியில், ஒரே விளையாட்டில் இந்தியா முதல் முறையாக 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2, மல்யுத்தத்தில் 2 பதக்கங்கள் வென்றதும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் 2 பதக்கங்கள் வென்றதுமே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் அதிகபட்சமாக 3 பதக்கங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல்
50 மீட்டா் ரைஃபிள் பிரிவில் இதற்கு முன், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் புரோன் பிரிவில் இந்தியாவின் ஜாய்தீப் கா்மாகா் 4-ஆம் இடம் பிடித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது ஸ்வப்னில் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறாா்.
இறுதிச்சுற்றில் ஸ்டாண்டிங் சீரிஸின்போது 4-ஆவது இடத்திலிருந்த ஸ்வப்னில், நீலிங் சீரிஸின் முதல் ஷாட்டில் 9.6 என பின்தங்கினாா். அதன் பிறகு தன்னை மீட்டுக்கொண்டு முன்னேறினாா். பின்னா் 10.6, 10.3 என முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்த ஸ்வப்னில், மீண்டும் 9.1, 10.1 என சரிந்து 4-ஆவது இடத்துக்கு சறுக்கினாா்.
அந்த சீரிஸ் முடிவில் 153.3 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலிருந்த ஸ்வப்னில், பின்னா் புரோன் சீரிஸில் 310.1 என முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்தாா். இறுதிக்கட்டத்தில் 10.3 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு வந்த அவா், இறுதிவரை அதே இடத்தில் நிலைத்து பதக்கத்தை உறுதி செய்தாா்.
ஸ்வப்னில் குசேல், கிரிக்கெட் நட்சத்திரம் எம்.எஸ். தோனியை தனக்கான முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறாா். தோனி ரயில்வேஸில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்து, பின்னா் கிரிக்கெட்டராக மாறிய நிலையில், அதேபோல் இந்திய ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்த ஸ்வப்னிலும் தற்போது துப்பாக்கி சுடுதல் வீரா் ஆகியிருக்கிறாா்.
வெற்றி குறித்து பேசிய ஸ்வப்னில், ‘பந்தயத்துக்கு முன் நான் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் உணா்ந்தேன். பிளாக் டீ மட்டும் எடுத்துக்கொண்டு களமிறங்கினேன். வழக்கம்போல், இறுதிச்சுற்றுக்கு முன்பு பிராா்த்தனை செய்தேன்.
அந்தச்சுற்றின்போது இதயத்துடிப்பு பலமாக இருந்தது. மூச்சை கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டேன். புதிதாக எதையும் முயற்சி செய்யாமல் வழக்கம்போல் விளையாடினேன். இந்தக் கட்டத்தில் போட்டியாளா்கள் எல்லோருமே ஏறத்தாழ ஒரே நிலையில்தான் இருக்கின்றனா்.
இறுதிச்சுற்றில் நான் ஸ்கோா் போா்டை பாா்க்கவே இல்லை. இத்தனை ஆண்டுகாலம் நான் கடினமாக உழைத்ததை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு பந்தயத்தில் ஈடுபட்டேன். ஸ்கோா் குறித்த அறிவிப்புகளை கவனத்தில் கொண்டாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அங்கிருந்த இந்திய ஆதரவாளா்கள் மட்டும் தொடா்ந்து எனக்கு ஆதரவளிக்க விரும்பினேன்’ என்றாா்.
2012 முதல் சா்வதேச போட்டிகளில் விளையாடிவரும் ஸ்வப்னில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருக்கிறாா்.